சென்னை: கல்வெட்டியல், தொல்லியல், அகழாய்வு தொடர்பான ஓராண்டு கால டிப்ளமா படிப்புக்கு, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசின் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் கல்வெட்டியல், தொல்லியல், அகழாய்வு தொடர்பான ஓராண்டு கால டிப்ளமா படிப்பை வழங்கி வருகிறது. 10-ம் வகுப்பு முடித்தவர்கள் இதில் சேரலாம். வயது வரம்பு கிடையாது.
இந்த படிப்பில் கல்வெட்டு படியெடுத்தல், ஆவணப்படுத்துதல் குறித்த பயிற்சியும் அளிக்கப்படும். இதன்மூலம் தமிழக வரலாறு, மொழி, பண்பாடு, கலை, இலக்கியம் குறித்து அறிந்து கொள்ளலாம்.
இந்த டிப்ளமா படிப்பில் 2026-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பத்தை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இணையதளத்தில் (www.ulakaththamizh.in) பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்பக் கட்டணம், சேர்க்கை கட்டணம், அடையாள அட்டை, தேர்வுக் கட்டணம் என மொத்தம் ரூ.4 ஆயிரம் செலுத்த வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் கட்டணத்துக்கான கேட்புக் காசோலையை (டிமாண்ட் டிராஃப்ட்) இணைத்து, ‘இயக்குநர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 2-ம் முதன்மைச் சாலை, மைய தொழில்நுட்ப பயிலக வளாகம், தரமணி, சென்னை-600113’ என்ற முகவரிக்கு ஜனவரி 20-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். கட்டணத்தை ரொக்கமாக செலுத்தி விண்ணப்பத்தை நேரிலும் சமர்ப்பிக்கலாம்.
வார விடுமுறை நாளான ஞாயிறுதோறும் முழுநேர வகுப்புகள் நடைபெறும். வகுப்பு தொடங்கும் நாள் பின்னர் தெரிவிக்கப்படும். மேலும் விவரம் அறிய 9500012272 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.