சென்னை: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் திட்டத்தை மத்திய நிதித் துறை உருவாக்கியுள்ளது. எனவே, பள்ளிகளின் பல்வேறு நிதி நடவடிக்கைகளில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறையை ஊக்குவிக்க வேண்டும்.
அதன்படி, பள்ளிக் கட்டணம், உணவகம், நூலகம் உள்ளிட்ட சேவைகளுக்கான கட்டணங்களைச் செலுத்த யுபிஐ போன்ற டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறைகளைச் செயல்படுத்தலாம். இணையதள இணைப்பு குறைவாக உள்ள பகுதிகளில் செயல்படும் பள்ளிகள், யுபிஐ லைட் போன்ற முறைகளைப் பயன்படுத்தலாம். மேலும், பாதுகாப்பான மற்றும் எளிமையான முறையில் கட்டணம் வசூலிக்க, பாரத் பில் பேமென்ட் சிஸ்டம் தளத்தில் பள்ளிகள் இணையலாம்.
பாதுகாப்பாக டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறைகளைப் பயன்படுத்துவது குறித்து பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பள்ளி நிகழ்ச்சிகள் மற்றும் பெற்றோர் - ஆசிரியர் சந்திப்புகளின்போது இதுதொடர்பான விழிப்புணர்வு இயக்கங்களை நடத்தலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.