சென்னை: பிஎட், எம்எட் பட்டதாரிகளுக்கு திருத்தம் செய்யப்பட்ட கல்விச் சான்றிதழ்களை உடனே வழங்குமாறு தனியார் சுயநிதி கல்வியியல் கல்லூரிகளுக்கு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக சுயநிதி கல்வியியல் கல்லூரிகளின் முதல்வர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) கே.ராஜசேகரன் அனுப்பிய சுற்றறிக்கை: பொது மற்றும் சிறப்புக் கல்வி பிரிவுகளில் பிஎட், எம்எட் பட்ட வகுப்பு படித்த மாணவர்களின் அசல் சான்றிதழ்களில் பெயர், பிறந்த தேதி, புகைப்படம் ஆகியவற்றில் திருத்தம் கோரிய கல்லூரிகளுக்கு திருத்தம் செய்யப்பட்ட சான்றிதழ்கள் அனுப்பப்படுகின்றன. ஒருசில கல்லூரிகள் குறைபாடு உடைய விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளன.
இதில் தேவையற்ற தாமதத்தை தவிர்க்க, மாணவர்களின் விண்ணப்பத்தை நேரடியாக பல்கலைக்கழகத்துக்கு சமர்ப்பித்து, திருத்தம் செய்த சான்றிதழ்களை மாணவர்களுக்கு உடனே வழங்க அறிவுறுத்தப்படுகிறது.