கோப்புப் படம்
ஆட்சியர் கலைச்செல்வி வெளியிட்ட அறிக்கை: காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா காவல் அரங்கம் மைதானத்தில், 4-வது புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் மாவட்ட நிர்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (BAPASI) இணைந்து, இந்த நான்காவது புத்தகத் திருவிழாவை நடத்துகின்றனர்.
இந்த புத்தகத் திருவிழா டிச.19 முதல் டிச.29-ம் தேதி வரை 11 நாட்கள் நாள்தோறும் காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை நடைபெறும்.
இதில் தென்னிந்தியா முழுவதும் இருந்து பல்வேறு பதிப்பாளர்கள், புத்தக வெளியீட்டாளர்கள் கலந்து கொள்ளும் வகையில் 100-க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டு, 1,000-க்கும் மேற்பட்ட எழுத்தாளர்களின் படைப்புகள், லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட உள்ளன.
இப்புத்தகக் கண்காட்சி புத்தகப் பிரியர்களுக்கு மாபெரும் விருந்தாகும். மேலும், புத்தகத் திருவிழாவில் தினந்தோறும் காலை முதல் மாலை வரை சிறப்பு அழைப்பாளர்களின் கருத்துரைகள், சிந்தனை தூண்டும் பேச்சாளர்களின் கருத்துரைகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பல்வேறு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் மற்றும் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.