சென்னை: தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 7,157 எம்பிபிஎஸ் இடங்கள், 1,383 பிடிஎஸ் இடங்கள் உள்ளன.
நிர்வாக ஒதுக்கீட்டில் 1,996 எம்பிபிஎஸ் இடங்கள், 580 பிடிஎஸ் இடங்கள் இருக்கின்றன. இந்த இடங்களுக்கு மொத்தம் 72,633 பேர் விண்ணப்பித்திருந்தனர். பரிசீலனைக்கு பிறகு, தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, முதல்சுற்று கலந்தாய்வு கடந்த 13-ம்
தேதி தொடங்கியது. சிறப்புப் பிரிவு கலந்தாய்வு (மாற்றுத்திறனாளி, முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசு, விளையாட்டு வீரர்) மற்றும் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டு இடங்களுக்கு அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு நேரடியாக நடந்தது.
அன்றைய தினமே பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு www.tnmedicalselection.org என்ற சுகாதாரத்துறை இணையதளத்தில் தொடங்கியது. ஆக. 19 வரை கல்லூரிகளை தேர்வு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது.
பின்னர் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, அவகாசம் 20-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், இரண்டாவது முறையாக வரும் 24-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பரிசீலனைக்குப் பிறகு இடஒதுக்கீடு செய்யப்பட்டதற்கான முடிவுகள் வரும் 27-ம் தேதி வெளியிடப்பட உள்ளது.