கல்வி

சிதம்பரம்: அண்ணாமலை பல்கலை., கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் உண்ணாவிரதப் போராட்டம்

க.ரமேஷ்

கடலூர்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர், ஊழியர் மற்றும் ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் இன்று (ஜன.22) காலை பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பூமா கோயில் அருகே நடைபெற்றது.

ஆசிரியர்கள் கூட்டமைப்பின் தலைவர் பேராசிரியர் சி.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அ.ரவி, இணை ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியர் பி.இளங்கோ, எஸ்.மதியழகன், கபில்தேவ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உண்ணாவிரதப் போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடலூர் மாவட்டச் செயலாளர் மாதவன் துவக்கி வைத்துப் பேசினார்.

          

பல்கலைக்கழக ஆசிரியர், ஊழியர்களுக்கான, பதவி உயர்வுகள் மற்றும் பணப்பயன்கள் மற்றும் 7-வது ஊதியக் குழு நிலுவைத் தொகைகளை உடன் வழங்க வேண்டும். 15 ஆண்டுகளாக பணி நிரந்தரம் செய்யப்படாத என்.எம்.ஆர் தொகுப்பூதியர்களை பணி நிரந்திரம் செய்ய வேண்டும். ஓய்வூதியர்களுக்கான மாத ஓய்வூதியம் கடந்த 14 மாதங்களாக வழங்கப்படவில்லை.

ஓய்வூதியர்களுக்கான பணப் பயன்கள், குறிப்பாக கம்யூட்டேசன் (Commutation), இ.எல் சரன்டர் ஒப்புவிப்புத் தொகைகள், பணிக் கொடை போன்றவை ஓய்வு பெற்று பல ஆண்டுகள் ஆகியும் ஓய்வூதியர்களுக்கு முழுமையாக வழங்கப்படவில்லை. அத்தொகையினை உடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதில் 500-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், ஊழியர்கள், ஓய்வூதியர்கள் ௧லந்து கொண்டனர். உண்ணாவிரதப் போராட்டம் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

SCROLL FOR NEXT