கல்வி

பிட்ஸ் பிலானி - சென்னை ஐஐடி புரிந்துணர்வு ஒப்பந்தம்: கல்வி, மாணவர் பரிமாற்றம், கூட்டு ஆராய்ச்சி

ஜெ.கு.லிஸ்பன் குமார்

சென்னை: கல்வி, மாணவர் பரிமாற்றம் மற்றும் கூட்டு ஆராய்ச்சி பணிகள் தொடர்பாக சென்னை ஐஐடி உடன் பிட்ஸ் பிலானி கல்வி நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்தியாவில் உள்ள முன்னணி தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் ஒன்றான பிட்ஸ் பிலானி நிறுவனம், கல்வி, ஆராய்ச்சி, மாணவர் பரிமாற்றம் தொடர்பாக சென்னை ஐஐடி உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

சென்னை ஐஐடியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பிட்ஸ் பிலானி துணைவேந்தர் வி.ராமகோபால் ராவ், ஐஐடி இயக்குநர் வீ.காமகோடி ஆகியோர் ஒப்பந்த ஆவணங்களை பரஸ்பரம் பரிமாறிக்கொண்டனர்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் 5 ஆண்டுகள் அமலில் இருக்கும். அதன்படி, பிட்ஸ் பிலானி மாணவர்கள் குறிப்பிட்ட காலம் சென்னை ஐஐடியில் கல்வி பயில்வதுடன் ஆராய்ச்சி பணியிலும் ஈடுபடலாம். புராஜெக்ட் ஒர்க் பணியையும் மேற்கொள்ளலாம். அதேபோல், ஐஐடி மாணவர்கள் பிட்ஸ் பிலானியில் படிக்கலாம். ஆராய்ச்சி பணிகளை மேற்கொள்ளலாம். இதற்காக ஒரு கல்வி நிறுவனங்களின் மாணவர்களும் எவ்வித கூடுதல் கல்விக்கட்டணம் ஏது்ம செலுத்த தேவையில்லை.

புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பாக ஐஐடி இயக்குநர் காமகோடி கூறுகையில், “வளர்ந்து வரும் புதிய தொழில்நுட்பங்கள் முதல் சுகாதார முயற்சிகள் வரை பல்வேறு துறைகளில் இரு கல்வி நிறுவனங்களும் இணைந்து செயல்பட முன்வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதனால் இரு நிறுவனங்களும் பல்வேறு நடைமுறைகளில் பயன்பெறும் கல்வி மற்றும் ஆராய்ச்சி வளங்களை பரஸ்பரம் பயன்படுத்திக்கொள்வதால் ஆசிரியர்களும், மாணவர்களும் பெரிதும் பயன்பெறுவர்” என்றார்.

பிட்ஸ் பிலானி துணைவேந்தர் ராமகோபால் ராவ் கூறும்போது, “மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் உயர்தர கல்விச்சூழல் கிடைக்க வேண்டும் என்று விரும்புவர்கள் நாங்கள். அந்த வகையில் பிட்ஸ் பிலானி - ஐஐடி இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் மாணவர்களின் உயர் கல்வி, ஆராய்ச்சி, ஆசிரியர் மேம்பாடு போன்றவற்றில் புதிய வாய்ப்புகளை உருவாக்கும். அதோடு, இந்தியாவின் இரு பெரும் உயர் கல்வி நிறுவனங்களின் கூட்டு முயற்சியை வலுப்படுத்தும்” என்று குறிப்பிட்டார்.

SCROLL FOR NEXT