கோப்புப் படம்
சென்னை: அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் பிஎட் படிப்பில் சேருவதற்கான ஆன்லைன் கலந்தாய்வு ஆகஸ்ட் 4-ம் தேதி (நாளை) தொடங்குகிறது.
தமிழகத்தில் 7 அரசு கல்வியியல் கல்லூரிகளும், 14 அரசு உதவி பெறும் கல்லூரிகளும் இயங்கி வருகின்றன. இக்கல்லூரிகளில் பிஎட் படிப்பில் 2,040 இடங்கள் ஒற்றைச்சாளர முறையில் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன உள்ளன.
இந்நிலையில், 2026-2027-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஜூன் 19-ம் தேதி தொடங்கி ஜூலை 31-ம் தேதி முடிவடைந்தது. மொத்தம் 5,900 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்தனர்.
எனினும் அவர்களில் 3,036 பேர் மட்டுமே விண்ணப்பத்திற்கான கட்டணத்தை செலுத்தி விண்ணப்பத்தை முழுமை செய்திருந்தனர். அவர்களின் தரவரிசை பட்டியல் ஜூலை 31-ம் தேதி வெளியிடப்பட்டது.
தரவரிசையில் இடம்பெற்றுள்ள மாணவர்கள் விருப்பமான கல்லூரியை தேர்வுசெய்வதற்கான ஆன்லைன் கலந்தாய்வு ஆகஸ்ட் 4 முதல் 10-ம் தேதி வரை நடைபெறும் என கல்லூரி கல்வி ஆணையரகம் அறிவித்திருந்தது.
அதன்படி ஆன்லைன் கலந்தாய்வு 4-ம் தேதி (செவ்வாய்) தொடங்குகிறது. இக்கலந்தாய்வு 10-ம் தேதி முடிவடைந்ததும் மாணவர்களுக்கு கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை 14-ம் தேதி அன்று ஆன்லைனில் வழங்கப்படும். மாணவர்கள் தங்கள் ஆன்லைன் விண்ணப்ப ஐடி-யை பயன்படுத்தி www.twise.ac.in என்ற இணையதளத்தில் கல்லூரி ஒதுக்கீட்டு ஆணையை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்வியியல் கல்லூரிகளில் ஆகஸ்ட் 17 முதல் 21-ம் தேதிக்குள் சேர்நதுவிட வேண்டும். ஏற்கனவே அறிவிக்கப்பட்டவாறு அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்பு ஆகஸ்ட் 24-ம் தேதி தொடங்கும் என்று கல்லூரி கல்வி ஆணையரக அதிகாரிகள் தெரிவித்தனர்.