சென்னை: 'டான்செட்', 'சீட்டா'' நுழைவுத் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஏப்ரல் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
அரசு, அரசு உதவி மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள எம்பிஏ, எம்சிஏ ஆகிய படிப்புகளில் சேர தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்விலும் (டான்செட்) எம்இ, எம்டெக், எம்பிளான், எம்ஆர்க் ஆகிய முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு பொது பொறியியல் நுழைவுத் தேர்விலும் (சீட்டா) தேர்ச்சி பெற வேண்டும்.
இந்த தேர்வுகளை தமிழக அரசு சார்பில் அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது. வரும் கல்வி ஆண்டு (2026-27) மாணவர் சேர்க்கைக்கான டான்செட், சீட்டா நுழைவுத் தேர்வுகளுக்கான அறிவிப்பு கடந்த மார்ச் 16-ம் தேதி வெளியிடப்பட்டு அன்றைய தினமே ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடங்கியது.
ஏப்ரல் 15 கடைசி தேதி
விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்ரல் 10-ம் தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு கடைசி தேதி ஏப்ரல் 15 வரை நீட்டிக்கப்பட்டிருப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
எனவே, டான்செட், சீட்டா நுழைவுத் தேர்வெழுத விரும்பும் மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளத்தை (www.annauniv.edu) பயன்படுத்தி ஏப்ரல் 15 வரை விண்ணப்பிக்கலாம்.
ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி, டான்செட் நுழைவுத்தேர்வு மே 9-ம் தேதியும், சீட்டா நுழைவுத்தேர்வு மே 10-ம் தேதியும் நடைபெற உள்ளன.