நேர்காணலில் கலந்துகொண்ட நடுவர் குழுவினர். படம்:பிரபு
சென்னை: ராம்ராஜ் காட்டன் நிறுவனத்துடன் இணைந்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் வழங்கும் ‘அன்பாசிரியர்’ விருதுக்காக இணையவழியில் நடத்தப்பட்ட நேர்காணலில் ஆசிரியர்கள் பலர் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.
மாணவர்களுக்கு தனித்துவமிக்க கல்வியை அளிப்பதுடன், மாறுபட்ட சிந்தனை உடன் செயல்பட்டு பள்ளிக்குப் பெருமை சேர்க்கும் அர்ப்பணிப்புமிக்க அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளின் (மாநிலப் பாடத்திட்டம்) ஆசிரியர்களை கவுரவிக்கும் விதமாக ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் சார்பில் ‘அன்பாசிரியர்’ விருது 2020-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் 6-வது முறையாக அன்பாசிரியர் விருதுகளை ராம்ராஜ் காட்டன் நிறுவனத்துடன் சேர்ந்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் வழங்கவுள்ளது. இதன் பங்குதாரர்களாக ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி, பொன்வண்டு மேட்டிக் லிக்யூடு, மதுரை சாந்தாஸ் சில்க்ஸ், பிஎஸ்ஆர் சில்க்ஸ் சாரீஸ் மற்றும் இந்தியஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி)ஆகியவை இணைந்துள்ளன.
இந்த விருதுக்குத் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 மாவட்டங்களில் இருந்து 450-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் விண்ணப்பித்தனர். அதில் முதல்கட்டமாகத் தேர்வான மதுரை, திருச்சி ஆகிய மண்டலங்களைச் சேர்ந்த ஆசிரியர்களுக்குக் கடந்த ஆக.16-ம் தேதி நேர்காணல் நடத்தப்பட்டது. தொடர்ந்து சென்னை,கோவை மண்டலங்களைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு இணையவழி நேர்காணல் நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான ஆசிரியர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
இந்த நேர்காணலில் சென்னை மாநிலக் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் சு.செல்வகுமாரன், சென்னை அடையாறு பாட்ரிஷியன் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் தனஞ்செயன், சென்னை சவீதா மருத்துவ மற்றும் தொழில்நுட்ப அறிவியல் நிறுவனத்தின் பொறியியல் கல்லூரி இணைத் தலைவர் ஜுடி கோபால், வடபழனி ஆவிச்சி கலை அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் பிரபாவதி, கிண்டி நோய்த்தடுப்பு மற்றும் ஆய்வு நிறுவன பேராசிரியர் திலகவதி, ராணிமேரி கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் கஸ்தூரிபாய், தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழக சிறப்பு கல்வியியல் பேராசிரியர் இரா.மு. தமிழ்செல்வன், ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி சமூகப்பணி துறை பேராசிரியர் மாதவி ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர்.
இதுகுறித்து நடுவர்கள் கஸ்தூரிபாய், தமிழ்செல்வன் ஆகியோர் கூறும்போது, “ஆசிரியர்களே ஒரு சமூகம் வளர்ச்சி பெற முக்கிய பங்காற்றுகின்றனர். அவர்களைக் கவுரவிக்கும் விதமாக வழங்கப்படும் இந்து தமிழ் திசை நாளிதழின் அன்பாசிரியர் விருது திட்டம் சிறப்பான முன்னெடுப்பாகும்.
அதுவும் அன்பாசிரியர் என்ற பெயரில் விருது வழங்குவது மிகவும் பொருத்தமானதாக இருக்கும். ஆசிரியர்கள் பலர் கற்பித்தலையும் தாண்டி பல்வேறுதனிச்செயல்பாடுகளை மேற்கொண்டு வருவது பாராட்டுக்குரியதாகும். இத்தகைய விருதுகள் ஆசிரியர்கள் தங்களைப் புதுப்பித்துக் கொள்ள வழிவகுக்கும். அவர்களுடன் கலந்துரையாடுவது எங்களுக்கும் ஊக்கமளிப்பதாக இருக்கிறது” என்றனர்.
முன்னதாக நேர்காணலில் கற்பித்தலில் புதிய உத்திகளைப் பயன்படுத்துதல், புத்தக வாசிப்பு, மாணவர் நலன், பள்ளியில் சேர்க்கையை உயர்த்துதல் உள்பட பல்வேறு அம்சங்களை முன்வைத்து ஆசிரியர்களிடம் கேள்விகள் முன்வைக்கப்பட்டன. அதனுடன் ஆசிரியர்களின் தனிச்சிறப்புகள் சார்ந்தும் ஆய்வு செய்யப்பட்டன. இதற்கிடையே நேர்காணல் முடிவுகள் விரைவில் வெளியிடப்படும்.
அதன்படி மாவட்டத்துக்கு ஒருவர் வீதம் 40 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு ‘அன்பாசிரியர்’ விருது சென்னை தி.நகர் வாணி மகாலில் ஆக.29-ம் தேதி வழங்கப்படும். மேலும், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் இந்த விருதுகளை வழங்கி சிறப்பிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.