சென்னை: பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான 2-வது சுற்று கலந்தாய்வு முடிவில் இதுவரை 88,930 பேருக்கு கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டது.
இது குறித்து தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்குழு நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பிஇ, பிடெக் படிப்புக்கான கலந்தாய்வில் சிறப்பு பிரிவு, பொதுப்பிரிவில் முதல்சுற்று, 2-ஆம் சுற்று கலந்தாய்வு முடிவில் மொத்தம் 88,930 பேருக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 3-வது சுற்று கலந்தாய்வில் பொதுப்பிரிவில் தரவரிசைப் பட்டியலில் 135.50 முதல் 77.50 வரையில் கட் ஆஃப் மதிப்பெண் பெற்றவர் களும், அரசு பள்ளி மாணவர்களில் தரவரிசை 135.50 முதல் 77.50 வரையில் கட் ஆஃப் பெற்ற மாணவர்கள் என ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 719 மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தாங்கள் விரும்பும் கல்லூரியை 19-ம் தேதிக்குள் தேர்வுசெய்ய வேண்டும்.
பிளஸ் 2 பொதுத் தேர்வை எழுதி பொறியியல் படிப்பில் சேர்வதற்கு விண்ணப்பம் செய்யாத மாணவர்களும், துணைத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்களும் துணை கலந்தாய்வுக்கு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.