வருடத்துக்குக் கிட்டத்தட்ட 9 லட்சம் மாணவர்கள் ‘ஐ.டி.ஐ.’ என்கிற தொழில்நுட்பப் படிப்பு முடிக்கிறார்கள். பள்ளி மாணவர்களாகட்டும் தொழில்நுட்பப் படிப்பு படிப்பவர்களாகட்டும் எந்த மாதிரியான, தரமான கல்வி பெறுகிறார்கள் என்பது நமக்குத் தெரியாததல்ல. பெரும்பாலான 12-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பிழையில்லாமல் எழுதப் படிக்கத் தெரியவில்லை என்பது அசர் கமிட்டியின் அறிக்கை.
தொழில்நுட்பம் படிக்கும் மாணவர்கள் இன்னும்கூட 30 ஆண்டுகளுக்கு முந்தைய பாடத்திட்டத்தை வைத்துக்கொண்டு, 60 ஆண்டுகளுக்கு முந்தைய கருவிகளைக் கொண்டு படிக்கிறார்கள். ஆசிரியர்கள் பலரும் 20 ஆண்டுகளுக்கு முன்பு தயார்செய்த நோட்ஸை வைத்து இன்னும் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அவசர அவசரமாக இப்போது சில மாற்றங்களைக் கொண்டுவர அரசு முயன்றுகொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் மட்டும் 4,000-க்கும் மேற்பட்ட தனியார் ஐ.டி.ஐ. நிறுவனங்கள் இயங்குகின்றன. அவற்றில் அடிப்படை வசதியான வகுப்பறையைக் கொண்டிராத நிறுவனங்களும் அதிகம் உண்டு. ஒரு ஐ.டி.ஐ.யில் தணிக்கை நடக்கும்போது வேறொரு ஐ.டி.ஐ.யிலிருந்து உபகரணங்களைக் கொண்டுவந்து காட்டி உரிமம் பெறுவது சர்வசாதாரணமாக நடக்கும் கூத்து. சில தொழிற்பயிற்சிப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கைக்காக மட்டும் சேர்க்கப்பட்டு, தணிக்கையின்போது மட்டும் வகுப்புக்கு வரவழைக்கப்படுகிறார்கள்.
ஒரே அரசாங்கம் ஐ.ஐ.டி.யை உலகத் தரமானதாகவும், ஐ.டி.ஐ.யை மோசமானதாகவும் நடத்துவதற்கு என்ன காரணம் என்ற தெளிவு இருந்தால், நமக்கு விடை கிடைத்துவிடும். தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல், உலகமயமாக்கல் ஆகியவை திறன் தேவையில் இவ்வளவு பெரிய இடைவெளியை உருவாக்கும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். எல்லாத் துறைகளிலும் தன்னை மேம்படுத்திக்கொண்ட இந்தியா, திறன் மேம்பாட்டில் கோட்டைவிட்டது துரதிர்ஷ்டமே.
தற்போதைய சூழலில் ஒரு பணியாளர் நிரந்தரப் பணியாளராவதற்குக் குறைந்தது 10 ஆண்டுகள் ஆகின்றன. இன்று தொழில்நிறுவனங்களின் பேராசை காரணமாக, குறைந்த சம்பளம் வாங்கி, எந்த சமூகப் பாதுகாப்பும் கேட்க முடியாத தற்காலிகப் பணியாளர்கள்தான் அதிகம்.
திறன் மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பல ஆயிரம் கோடிகளை மேலும் வீணடித்து, 10 ஆண்டுகளுக்குப் பிறகு, ஏன் தோற்றுப்போனோம் என்றுகூடத் தெரியாத சூழல் ஏற்படலாம். பின்லாந்தில் உயரிய குடிமைப் பணிகளுக்காகத் தேர்வானவர்கள் அரசுப் பள்ளிகளில் ஓராண்டு பணியாற்ற வேண்டும். இந்தியாவிலும் ஐ.ஏ.எஸ். தேர்வானால், முதல் ஒரு வருடம் அரசுப் பள்ளியில் பணியமர்த்தப்பட வேண்டும். அரசு செலவில் ஐ.ஐ.டி. போன்ற உயர் தொழிற்கல்வி பயில்வோர் ஒரு வருடம் அரசு ஐ.டி.ஐ.யில் பணிபுரிய வற்புறுத்தப்பட வேண்டும். இதை முடிக்காதவர்கள் வெளிநாட்டுக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட வேண்டும்.
அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் ‘No Worker Left Behind’ என்ற இயக்கத்தில் எல்லோரையும் உள்ளடக்கிய வளர்ச்சி அமல்படுத்தப்பட்டது. அதைப் போல் தமிழகத்தில் எல்லாப் பணியாளர்களையும் உள்ளடக்கிய, ஒருங்கிணைந்த ஒரு இயக்கம் உருவானால், முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கும் ‘நான் முதல்வன்’ திட்டம் வெற்றி அடையும்.
> இது, ராஜு ஆறுமுகம் எழுதிய இந்து தமிழ் திசை ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்
> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க - டிஜிட்டல் சந்தா திட்டங்கள்