

நம் நாட்டு முன்னேற்றத்தின் வேகத்துக்கு ஈடுகொடுக்க 2022-ல் குறைந்தது 50 கோடி பணியாட்கள் இருக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கொடுத்த அறைகூவலில் தொடங்கப்பட்டதே ‘NSDC’ என்னும் தேசியத் திறன் வளர்ப்பு ஆணையம். இப்போது அது தனி அமைச்சரகமாக இயங்கிவருகிறது.
1980-களில் மக்கள்தொகைப் பெருக்கம் ஒரு சமூகப் பிரச்சினையாகப் பார்க்கப்பட்டது. வறுமை, உணவுத் தட்டுப்பாடு, வேலையில்லாத் திண்டாட்டம் என்ற எல்லாக் காரணங்களுக்காகவும் மக்கள்தொகைப் பெருக்கம் காரணமாகப் பார்க்கப்பட்டது. ஆனால், இன்று மக்கள்தொகையை மக்கட்செல்வம் என்று பார்க்கும் பார்வை உருவாகியிருக்கிறது. இந்தியாவின் சுமார் 140 கோடி மக்கள்தொகையில் 60% இளைஞர்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அவ்வளவும் மக்கள்செல்வமே. ஆனால், 50 கோடி பணியாட்கள் என்பது கிட்டத்தட்ட எட்ட முடியாத குறிக்கோளாகவே இருக்கிறது. இந்த சிக்கலால் இப்போது மோடியின் அரசு இந்த இலக்கை 40 கோடியாகக் குறைத்துள்ளது.
வருடத்துக்குக் கிட்டத்தட்ட 9 லட்சம் மாணவர்கள் ‘ஐ.டி.ஐ.’ என்கிற தொழில்நுட்பப் படிப்பு முடிக்கிறார்கள். பள்ளி மாணவர்களாகட்டும் தொழில்நுட்பப் படிப்பு படிப்பவர்களாகட்டும் எந்த மாதிரியான, தரமான கல்வி பெறுகிறார்கள் என்பது நமக்குத் தெரியாததல்ல. பெரும்பாலான 12-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பிழையில்லாமல் எழுதப் படிக்கத் தெரியவில்லை என்பது அசர் கமிட்டியின் அறிக்கை.
தொழில்நுட்பம் படிக்கும் மாணவர்கள் இன்னும்கூட 30 ஆண்டுகளுக்கு முந்தைய பாடத்திட்டத்தை வைத்துக்கொண்டு, 60 ஆண்டுகளுக்கு முந்தைய கருவிகளைக் கொண்டு படிக்கிறார்கள். ஆசிரியர்கள் பலரும் 20 ஆண்டுகளுக்கு முன்பு தயார்செய்த நோட்ஸை வைத்து இன்னும் பாடம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அவசரஅவசரமாக இப்போது சில மாற்றங்களைக் கொண்டுவர அரசு முயன்றுகொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் மட்டும் 4,000-க்கும் மேற்பட்ட தனியார் ஐ.டி.ஐ. நிறுவனங்கள் இயங்குகின்றன. அவற்றில் அடிப்படை வசதியான வகுப்பறையைக் கொண்டிராத நிறுவனங்களும் அதிகம் உண்டு. ஒரு ஐ.டி.ஐ.யில் தணிக்கை நடக்கும்போது வேறொரு ஐ.டி.ஐ.யிலிருந்து உபகரணங்களைக் கொண்டுவந்து காட்டி உரிமம் பெறுவது சர்வசாதாரணமாக நடக்கும் கூத்து. சில தொழிற்பயிற்சிப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கைக்காக மட்டும் சேர்க்கப்பட்டு, தணிக்கையின்போது மட்டும் வகுப்புக்கு வரவழைக்கப்படுகிறார்கள்.
தேர்வு வரும்போது புத்தகத்தைப் பார்த்து எழுத வைப்பதும் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. இதைத் தவிர, செய்முறை வகுப்புகள் நடைபெறுவதே இல்லை. இதன் காரணமாக, மாணவர்கள் தொழிற்சாலையில் நேர்முகத் தேர்வுக்கு வரும்போது மிகச் சாதாரணமான கேள்விகளைக் கூட எதிர்கொள்ளும் நிலையில் இருப்பதில்லை. தொழிற்பயிற்சி நிறுவனங்களில் கணினிகள் உள்ளிட்ட நவீன உபகரணங்கள் பெரும்பாலும் இருப்பதில்லை. அப்படியே இருந்தாலும், அதைச் சொல்லிக்கொடுக்கும் அளவுக்குத் தகுதியான ஆசிரியர்களும் இருப்பதில்லை.
ஒரே அரசாங்கம் ஐ.ஐ.டி.யை உலகத் தரமானதாகவும், ஐ.டி.ஐ.யை மோசமானதாகவும் நடத்துவதற்கு என்ன காரணம் என்ற தெளிவு இருந்தால், நமக்கு விடை கிடைத்துவிடும். தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல், உலகமயமாக்கல் ஆகியவை திறன் தேவையில் இவ்வளவு பெரிய இடைவெளியை உருவாக்கும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். எல்லாத் துறைகளிலும் தன்னை மேம்படுத்திக்கொண்ட இந்தியா, திறன் மேம்பாட்டில் கோட்டைவிட்டது துரதிர்ஷ்டமே. தொழிற்பயிற்சி நிறுவனங்களைத் தரம் உயர்த்துவதிலும் அங்கு பயிலும் மாணவர்களின் தொழிற்திறனை மேம்படுத்துவதிலும் தமிழ்நாடு தொழிலாளர் திறன் மேம்பாட்டுத் துறை சிறப்புக் கவனம் செலுத்திவருவது பாராட்டுக்குரியது.
ஐ.டி.ஐ. மாணவர்கள் திறன் சார்ந்த பணிகளுக்காகப் படிக்கிறார்கள். ஆனால், மிகப் பெரிய நிறுவனங்கள்கூட ஐ.டி.ஐ. மாணவர்களை ஒதுக்கிவிட்டுத் திறன்சார்ந்த, பகுதியளவு திறன்சார்ந்த வேலைகளுக்குக்கூட 2 மாணவர்களை எடுத்து, குறைந்த சம்பளம் கொடுத்து வேலை வாங்குவதும் அதை அரசு கண்டும் காணாமல் இருப்பதும் மிகப் பெரிய சிக்கலை உருவாக்கியிருக்கிறது. இந்த மாதிரியான பாசாங்கு வேலைகள் மூலம் தொழிற்சாலையின் மனிதவள மேம்பாட்டு மேலாளர்கள் நிறுவனத்துக்கு மிகப் பெரிய சேமிப்பை ‘HR Strategy’ என்ற போர்வையில் செய்துவிட்டதாக மார்தட்டிக்கொள்கிறார்கள். சமூகத்துக்குத் தாங்கள் ஏற்படுத்திய பின்னடைவைப் பற்றி எந்த விதமான குற்றவுணர்வும் அவர்களிடம் இல்லை.
தற்போதைய சூழலில் ஒரு பணியாளர் நிரந்தரப் பணியாளராவதற்குக் குறைந்தது 10 ஆண்டுகள் ஆகின்றன. புள்ளிவிவரங்களின்படி, முன்பு நிரந்தரப் பணியாளர்கள் அதிகமாக இருந்தார்கள். ஆனால், இன்று தொழில்நிறுவனங்களின் பேராசை காரணமாக, குறைந்த சம்பளம் வாங்கி, எந்த சமூகப் பாதுகாப்பும் கேட்க முடியாத தற்காலிகப் பணியாளர்கள்தான் அதிகம்.
தமிழகத்தில் சிறு வயதிலேயே போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி, சொந்த ஊரை விட்டு வெளியே வராமல் வீட்டோடு முடங்கிக்கிடக்கும் இளைஞர் கூட்டம் அதிகமாகிக்கொண்டே போகிறது. படிப்புக்குச் சிறிதும் சம்பந்தமில்லாத வேலை செய்துகொண்டு, கிடைக்கும் வருமானத்தில் குடித்துவிட்டு, மதுக்கடையின் வாசலில் விழுந்து கிடக்கும் டெக்னீஷியன்கள் பலரை எப்படி வெளியே கொண்டுவருவது?
இதற்கான விடிவு காலம் எப்படி என்பதை விரைவில் கண்டறிய வேண்டும். இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காகத் திறன் மேம்பாட்டு ஆணையம் இத்தாலியிலிருந்தும், பிரான்ஸிலிருந்தும் நிபுணர்களை அழைத்துக்கொண்டு வந்திருக்கிறது. ஏற்கெனவே, எவெரான் என்ற நிறுவனம் திறன் மேம்பாடு என்ற போர்வையில், திறன் மேம்பாட்டு ஆணையத்தின் கண்ணில் மண்ணைத் தூவி, பல கோடி ரூபாய் மோசடி செய்தது என்ற குற்றச்சாட்டில் அதன் நிர்வாக அதிகாரி கிஷோர் சிறை சென்றது நினைவிருக்கும்.
திறன் மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பல ஆயிரம் கோடிகளை மேலும் வீணடித்து, 10 ஆண்டுகளுக்குப் பிறகு, ஏன் தோற்றுப்போனோம் என்றுகூடத் தெரியாத சூழல் ஏற்படலாம். பின்லாந்தில் உயரிய குடிமைப் பணிகளுக்காகத் தேர்வானவர்கள் அரசுப் பள்ளிகளில் ஓராண்டு பணியாற்ற வேண்டும். இந்தியாவிலும் ஐ.ஏ.எஸ். தேர்வானால், முதல் ஒரு வருடம் அரசுப் பள்ளியில் பணியமர்த்தப்பட வேண்டும். அரசு செலவில் ஐ.ஐ.டி. போன்ற உயர் தொழிற்கல்வி பயில்வோர் ஒரு வருடம் அரசு ஐ.டி.ஐ.யில் பணிபுரிய வற்புறுத்தப்பட வேண்டும். இதை முடிக்காதவர்கள் வெளிநாட்டுக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட வேண்டும்.
அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் ‘No Worker Left Behind’ என்ற இயக்கத்தில் எல்லோரையும் உள்ளடக்கிய வளர்ச்சி அமல்படுத்தப்பட்டது. அதைப் போல் தமிழகத்தில் எல்லாப் பணியாளர்களையும் உள்ளடக்கிய, ஒருங்கிணைந்த ஒரு இயக்கம் உருவானால், முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கும் ‘நான் முதல்வன்’ திட்டம் வெற்றி அடையும்.
- ராஜு ஆறுமுகம், மனிதவள மேம்பாட்டில் ஃபோர்டு போன்ற பன்னாட்டு நிறுவனங்களில் 30 வருடங்கள் அனுபவம் பெற்றவர். தொடர்புக்கு: rajuarumugham@gmail.com