ஆசிரியர் தின விழாவையொட்டி, நல்லாசிரியர் விருது வழங்கும் விழா சென்னை கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் பங்கேற்று, விருதுகளை வழங்கினார். துறை செயலர் பி.சந்தரமோகன், இயக்குநர் லதா உள்ளிட்டோர் உடனிருந்தனர். படம்: எஸ்.சத்தியசீலன்

 
கல்வி

396 ஆசிரியர்களுக்கு மாநில நல்லாசிரியர் விருது: பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் வழங்கினார்

செய்திப்பிரிவு

சென்னை: மறைந்த குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்.5-ம் தேதி தேசிய ஆசிரியர் தினமாகக் கொண்டா டப்படுகிறது. அதையொட்டி, மாநில அளவில் சிறந்த ஆசிரியர்களைத் தேர்வு செய்து ‘டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது’ வழங்கி தமிழக அரசு கவுரப்படுத்தி வருகிறது. இந்த விருது பெறுபவர்களுக்கு ரூ.10,000 ரொக்கம், வெள்ளிப் பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.

அதன்படி நடப்பாண்டில் 396 ஆசிரியர்கள் மாநில நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான விருது வழங்கும் விழா சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளிக்கல்வித் துறைச் செயலர் பி.சந்தரமோகன் தலைமை வகித்தார். பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று 396 ஆசிரியர்களுக்கு மாநில நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவித்தார்.

அதைத்தொடர்ந்து அமைச்சர் பேசியதாவது: தன்னிடம் படித்த மாணவர்கள் தன்னைவிட உயரத்துக்குச் செல்லும்போது எவ்வித பொறாமையும் இல்லாமல் பெருமைப்படும் சான்றோர்கள்தான் ஆசிரியர்கள். அனைத்து ஆசிரியர்களுமே சிறந்த ஆசிரியர்கள் தான். பள்ளிகளில் பயிலும் அனைத்துக் குழந்தைகளின் வாழ்க்கையை ஆசிரியர்கள் சிறப்பாகக் கவனித்துகொள்ள வேண்டும். அதேநேரத்தில் ஆசிரியர்களின் வாழ்க்கையை மாற்றுவதற்கான அனைத்து விஷயங்களையும் உயிரைக் கொடுத்தாவது செய்வோம்.

இந்த அரசு அறிமுகப்படுத்தும் புதிய பாடத்திட்டத்தை மாணவர்களிடம் ஆசிரியர்கள் கொண்டு சேர்க்க வேண்டும். இந்த பாடத்திட்டம் இந்தியாவுக்கே முன்னுதாரணமாக மாற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்வில் பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் என்.லதா, தொடக்கக் கல்வித்துறை இயக்குநர் பூ.ஆ.நரேஷ், தமிழக பாடநூல் கழகத் தலைவர் லயோலா மணி, ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலர் வி.சி.ராமேஸ்வர முருகன் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.

சென்னை மயிலாப்பூரில் உள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் இல்லத்தில் சாந்தா பப்ளிஷர்ஸ், ஆசிரியர் கல்வியாளர் கூட்டமைப்பு, தமிழக மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர்கள் நலச்சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா நேற்று நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் ராஜ்மோகன், எஸ்.ராஜேஸ்குமார் ஆகி யோர் பங்கேற்றனர். தொடர்ந்து, பள்ளிமற்றும் ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

முதல்வர் வாழ்த்து: ஆசிரியர் தினத்தையொட்டி முதல்வர் விஜய் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், ‘‘மாணவர்களின் மனங்களில்அறிவொளி ஏற்றி, ஒழுக்கம், மனிதநேயம், சகோதரத்துவம் மற்றும் சமூகப்பொறுப்பு உள்ளிட்ட உயரிய நற்பண்புகளை விதைத்து, எதிர்கால வாழ்வுக்கான அடித்தளத்தை அமைத்துத் தருவதுடன்,நாட்டின் வளர்ச்சியோடு ஒட்டுமொத்த சமூக முன்னேற்றத்தையும் கட்டமைக்கும் உன்னதப்பணியை மேற்கொண்டு வரும் ஆசிரியர்களின் மகத்தான பணிகளை போற்றுவோம்’’ எனக் கூறியுள்ளார்.

மேலும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தேமுதிகபொதுச்செயலாளர் பிரேமலதா உள்ளிட்டோரும் ஆசிரியர் தின வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT