சென்னை: இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் மறுதேர்வு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்புடன் நேற்று நடைபெற்றது. 22 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தேர்வை எழுதினர்.
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் நீட் தேர்வில் தகுதி பெறுபவர்களைக் கொண்டு நிரப்பப்படுகின்றன. அதேபோல், ராணுவக் கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.
அதன்படி 2026-27-ம் கல்வியாண்டுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் கடந்த மே மாதம் 3-ம் தேதி நடைபெற்றது. 22 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர். இதற்கிடையில், நீட் தேர்வுக்கான வினாத்தாள் முன்கூட்டியே கசிந்தது உறுதி செய்யப்பட்டதால், நடந்து முடிந்த நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்தது. வினாத்தாள் கசிவுக்கு காரணமானவர்கள் கைது செய்யப்பட்டனர். மறுதேர்வு ஜூன் 21-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நீட் மறுதேர்வு நேற்று நடைபெற்றது. நாடு முழுவதும் 551 நகரங்கள் மற்றும் 14 வெளிநாடுகளில் சுமார் 5,500 மையங்களில் நடந்த தேர்வை 22 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். தமிழகத்தில் 307 தேர்வு மையங்களில் 1.20 லட்சத்துக்கும் மேற்பட்டோரும், சென்னையில் 43 மையங்களில் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோரும் பங்கேற்றனர். தேர்வு மையத்துக்குள் காலை 11 மணிமுதல் மதியம் 1.30 மணிக்குள் வந்த மாணவர்கள் மட்டும் மெட்டல் டிடெக்டர் சோதனை, ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் சோதனைக்குப் பின்னர் அனுமதிக்கப்பட்டனர். அதன்பின்னர் வந்தவர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
அதேபோல் மதம், கலாச்சாரம் சார்ந்த ஆடைகளுக்கு தடை விதிக்கப்பட்டது. நகை, பெல்ட் அணிந்து வந்த மாணவ, மாணவிகளை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி அவற்றை கழற்றி பெற்றோர்களிடம் கொடுத்துவிட்டு அனுமதித்தனர். அதிக உயரம் கொண்ட ஷூக்கள், காலணிகள் அணிந்து வந்தவர்கள் அவற்றை கழற்றி வைத்துவிட்டு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது. செல்போன், கால்குலேட்டர், புளூடூத் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
வழக்கமாக, நீட் தேர்வு பிற்பகல் 2 மணிமுதல் மாலை 5 மணிவரை 3 மணி நேரம் நடைபெறும் நிலையில், மாணவர்களின் தேர்வு நேரம் நிர்வாக நடைமுறைகளால் பாதிக்கப்படாமல் இருக்க, கூடுதலாக 15 நிமிடங்கள் தேர்வு நேரம் நீட்டிக்கப்பட்டது. நீட் தேர்வு மையங்கள் அனைத்தும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டன. ஒருங்கிணைப்பாளர்கள், கண்காணிப்பாளர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் இருந்தனர். நீட் மறுதேர்வு
பணியில் மொத்தம் 2 லட்சம் அலுவலர்கள் பணியாற்றினர். தேர்வை சரியாக நடத்தி முடிக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவிட்டிருந்ததால், பலத்த பாதுகாப்புடன் வினாத்தாள்கள் தேர்வு மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டன.
தேர்வு எழுதிவிட்டு வந்த மாணவர்கள் கூறுகையில், “இயற்பியல் பாடத்திலிருந்து கேட்கப்பட்ட கேள்விகள் கடினமாகஇருந்தன. கடந்த மே மாதம் 3-ம் தேதி நடந்த நீட் தேர்வு வினாத்தாளை விட, இந்த மறுதேர்வு வினாத்தாள் சற்று கடினமாக இருந்தது” என்றனர். நீட் தேர்வு முடிவுகளை 10 நாட்களுக்குள் வெளியிட தேசியத் தேர்வுகள் முகமை திட்டமிட்டுள்ளது.