சென்னை: ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் விரைவில் 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவுசெய்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு ஆகஸ்ட் மாதம் வெளியாகிறது.
அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள், தையல், ஓவியம், உடற்கல்விஉள்ளிட்ட சிறப்பு ஆசிரியர்கள், பட்டதாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் டிஆர்பி எனப்படும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக நியமிக்கப்படுகிறார்கள். அதுமட்டுமின்றி வட்டார கல்வி அலுவலர், அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர், அரசு கல்லூரி உதவி பேராசிரியர், அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியிடங்களும் ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாகவே நிரப்பப்படுகி்ன்றன.
தற்போது அரசு பள்ளிகளில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. எனினும் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக அந்த பணியிடங்களில் தொகுப்பூதியத்தில் தற்காலிக ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டு கற்பித்தல் பணிகள் தொய்வின்றிநடந்து வருகின்றன. அரசு பள்ளிகளில் நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை அரசியல் கட்சி தலைவர்களால் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அரசு பள்ளிகளில் டிஆர்பி மூலம் 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்களை விரைவில் நியமிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவுசெய்துள்ளது. இதற்கான அறிவிப்பு ஆகஸ்ட் மா்தம் வெளியாகிறது. பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான அறிவிப்பை ஆகஸ்ட் மத்தியில் வெளியிட்டு போட்டித்தேர்வினை நவம்பர் மாதம் நடத்த டிஆர்பி திட்டமிட்டுள்ளது. பட்டதாரி ஆசிரியர் தேர்வை டெட் தாள்-2-ல் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் எழுதலாம்.
பட்டதாரி ஆசிரியர் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர் தேர்வை பொருத்தவரையில் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் 150 கேள்விகளுக்கும் கட்டாய தமிழ் மொழி தகுதித்தேர்வில் 30 கேள்விகளுக்கு்ம் விடையளிக்க வேண்டும். தமிழ் தாள் தேர்வில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண் எடுக்க வேண்டும்.
தமிழ் தேர்வு மதிப்பெண் மெரிட் பட்டியலுக்கு எடுத்துக்கொள்ளப்படாது என்றாலும் இதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே விண்ணப்பதாரரின் பாடத்தேர்வு விடைத்தாள் மதிப்பீடு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக பட்டதாரி ஆசிரியர் தேர்வானது கடந்த 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் தேர்வு நடத்தப்பட்டு அதன்மூலம் 2,582 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.