தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத் தேர்வு நேற்று தொடங்கியது. சென்னை எழும்பூரில் உள்ள மாநில பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேர்வு எழுதத் தயாராக இருந்த மாணவ, மாணவிகள். படம்: எஸ்.சத்தியசீலன்

 
கல்வி

பிளஸ் 2 தமிழ் மொழிப் பாடத் தேர்வு எளிது: அதிக மதிப்பெண் கிடைக்கும் என ஆசிரியர்கள் கருத்து

செய்திப்பிரிவு

சென்னை: தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத் தேர்வு நேற்று தொடங்கியது. முதல் நாளில் தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்றன. இத்தேர்வை தமிழகம் முழுவதும் உள்ள 3,412 மையங்களில் 8 லட்சத்து 6,370 மாணவர்கள் எழுதினர். 1,600 தனித் தேர்வர்கள் உட்பட 9,919 பேர் தேர்வு எழுத வரவில்லை.

தேர்வு காலை 10.15 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணி வரை நடைபெற்றது. சென்னை தியாகராய நகரில் உள்ள குண்டூர் சுப்பையா மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பொதுத் தேர்வுக்கான ஏற்பாடுகளை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் ஆய்வு செய்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘‘பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் சரியாக தூங்காமல், சரியாக சாப்பிடாமல் உடல்நலனை கெடுத்துக் கொள்ளக் கூடாது. நன்கு படித்துவிட்டு, போதிய அளவு உறங்கிவிட்டு தேர்வுகளை எழுத வேண்டும்.

          

பெற்றோரும் மாணவர்களுக்கு அழுத்தத்தை கொடுக்க வேண்டாம். விருதுநகர் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கு சென்ற மாணவி விபத்தில் சிக்கிஉயிரிழந்த செய்தி வருத்தமளிக்கிறது. இயன்றவரை, அருகில் உள்ள தேர்வு மையங்கள்தான் மாணவர்களுக்கு ஒதுக்கப்படுகின்றன. எனினும், எதிர்பாராதவிதமாக இதுபோன்ற அசம்பாவிதங்கள் நிகழ்கின்றன.இதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று தெரிவித்தார்.

இதற்கிடையே, பிளஸ் 2 தமிழ் தேர்வு எளிதாக இருந்ததாக மாணவர்கள் தரப்பில் கூறப்பட்டது. இதுகுறித்து தமிழ் ஆசிரியர்களிடம் கேட்டபோது, ‘‘ஒரு மதிப்பெண் பகுதியில் மொத்தம் உள்ள 14 கேள்விகளில் 3 மட்டும் சற்று கடினமாக இருந்தன. மற்ற கேள்விகள் எளிதாகவே இருந்தன.

சிறுவினா, மனப்பாடம், இலக்கணம், நெடுவினா ஆகிய பகுதிகளில் காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் ஏற்கெனவே கேட்கப்பட்ட கேள்விகளே மீண்டும் இருந்தன. இதனால், சராசரியாக படிக்கும் மாணவர்கள்கூட தமிழ்ப் பாடத்தில் அதிக மதிப்பெண் பெற வாய்ப்பு உள்ளது’’ என்றனர்.

இன்று முதல் ‘பிளஸ் 1’ அரியர் தேர்வு: மாணவர்களுக்கான அழுத்தத்தை குறைக்கும் நோக்கில், நடப்பு ஆண்டு முதல் பிளஸ் 1 பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. எனினும், முந்தைய ஆண்டுகளில் பிளஸ் 1 பொதுத் தேர்வில் வெற்றி வாய்ப்பை இழந்த மாணவர்கள், அந்த பாடங்களை அரியர் தேர்வாக எழுத வேண்டும் என்று தேர்வுத் துறை அறிவித்தது. அதன்படி, பிளஸ் 1 அரியர் பொதுத் தேர்வு இன்று (மார்ச் 3) தொடங்குகிறது.

SCROLL FOR NEXT