சென்னை: பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வு எளிதாக இருந்ததால், முழு மதிப்பெண் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மார்ச் 11-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், அறிவியல் பாடத் தேர்வு நேற்று நடைபெற்றது. மாநிலம் முழுவதும் 4,219 மையங்களில் சுமார் 8.80 லட்சம் மாணவர்கள் எழுதினர். தேர்வு எளிதாக இருந்ததால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து அறிவியல் பாட ஆசிரியர்கள் கூறும்போது, “அறிவியல் தேர்வில் அனைத்துப் பிரிவு வினாக்களும் மிக எளிதாக இருந்தன. சராசரியாக படிக்கும் மாணவர்கள்கூட 70 சதவீத மதிப்பெண்களைப் பெறமுடியும். இந்த ஆண்டு அறிவியல் பாடத்தில் முழு மதிப்பெண் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும்” என்றனர்.
சமூக அறிவியல் பாடத் தேர்வு ஏப்.2-ம் தேதி நடைபெற உள்ளது. ஒட்டுமொத்தமாக, 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு ஏப்.6-ம் தேதியுடன் முடிவடைகிறது. தேர்வு முடிவுகள் மே 20-ம் தேதி வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.