பிரவீன்குமார்
கேளம்பாக்கம்: கேளம்பாக்கம் அடுத்த தையூர் சின்னமா நகர் பகுதியைச் சேர்ந்த பிரவீன்குமார் (23) கடந்த 16ம் தேதி இரவு 10 மணியளவில் வீட்டின் அருகே செல்போனில் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது காரில் வந்த மர்ம கும்பல், பிரவீன்குமாரை அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் அவரது தலை, கைகள், முதுகு உள்ளிட்ட பகுதிகளில் வெட்டுக்காயங்கள் ஏற்பட்டன. பிரவீன் குமார் உயிருக்கு போராடிய நிலையில், அவர் இறந்துவிட்டதாக நினைத்த கும்பல் காரில் அங்கிருந்து தப்பிச் சென்றது.
பிரவீன் குமாரின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின் பேரில் கேளம்பாக்கம் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், பிரவீன்குமார் தையூர் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலையின் மகளை காதலித்து வந்ததாகவும், இதற்கு பெண்ணின் பெற்றோர், உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிய வந்தது. இதையடுத்து ஏழுமலை (48), அவரது சகோதரர் மணிகண்டன் (31), நந்தீஸ் (19) ஆகிய 3 பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையே, கடந்த 5 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த பிரவீன்குமார், கடந்த 21-ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, கொலை முயற்சி வழக்கு, கொலை வழக்காக மாற்றப்பட்டது. தொடர்ந்து ஏழுமலையின் மகன் கவுதம் (20) என்பவரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சாலை மறியல்: பிரவீன் குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்குப் பிறகு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டபோது ஓ.எம்.ஆர்.சாலையில் தையூர் கிராமத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். கேளம்பாக்கம் உதவி ஆணையர் ஜான் விக்டர், இன்ஸ்பெக்டர் தமிழன்பன், தாழம்பூர் இன்ஸ்பெக்டர் பிரவீன் ராஜேஷ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டக்காரர்கள் கலைந்து செல்லாததால், போலீஸார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர்.
இந்நிலையில், இந்த கொலை சம்பவத்தின் முக்கிய மூளையாக செயல்பட்டதாகக் கூறப்படும் சதீஷை கேளம்பாக்கம் போலீஸார் நேற்று கைது செய்தனர். இதன்மூலம் இந்த வழக்கில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காதல் விவகாரத்தில் இளைஞர் ஒருவர் அரிவாளால் வெட்டப்பட்டு, உயிரிழந்த சம்பவம் கேளம்பாக்கம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.