

சென்னை: ‘திமுகவில் தொண்டர்களை சில மூத்த நிர்வாகிகள் அரவணைத்துச் செல்வதில் சறுக்கி விட்டனர்’ என்று மு.க.ஸ்டாலின் கண்டித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயற்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: நாம் பார்க்காத வெற்றியும் இல்லை; பார்க்காத தோல்வியும் இல்லை. தேர்தலில்தான் தோல்வி அடைந்திருக்கிறோமே தவிர, நிரந்தரமாக இல்லை. நம் தவறுகளை முதலில் நாம் ஒத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு தொகுதியாக குறைகளைக் கண்டறிந்து ஆளை மாற்றுவதைவிட முழுமையான சுயபரிசோதனை வேண்டும் என முடிவெடுத்தேன்.
அந்த வகையில் திமுகவின் நிர்வாக அமைப்பில் பலமாறுதல்களைச் செய்யவிருக்கிறோம். அது சிலருக்கு கசப்பானதாக இருக்கும். கசப்புதான் உடலுக்கு நன்மை செய்யும். அதற்கு நீங்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இளைஞர்கள், பெண்கள் நம்பிக்கையை மீண்டும் நமக்கு பெற்றுத் தருவதுபோல நம் நடவடிக்கைகள் அமைய வேண்டும்.
இனிவரும் நிர்வாகிகளுக்கு, அந்தந்த பொறுப்புகளுக்கு ஏற்ப வயது வரம்பையும், பதவிக் காலத்தையும் அறிமுகப்படுத்த போகிறோம். புதுமுகங்களுக்கு அதிகமான எண்ணிக்கையில் பொறுப்புகளை வழங்கப் போகிறோம். விரைவில் புதிய உறுப்பினர் சேர்க்கையை தொடங்கவேண்டும். அது நேர்மையா னதாக, உண்மையானதாக அமைய வேண்டும்.
அனைத்து மட்டத்திலும் உட்கட்சித் தேர்தல் முறையாக நடத்தப்படும். தகுதி வாய்ந்த புதிய நிர்வாகிகள் வெற்றி பெற்று வருவார்கள்; நியமனங்களாக இல்லாமல் தேர்தல் மூலமாக வெல்பவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என்கிற நம்பிக்கை எனக்கு உள்ளது. கட்சியை மறுசீரமைப்பு செய்வது மூலமாக மட்டும்தான், நாம் மீண்டும் அரசியல் வெற்றியைப் பெற முடியும்.
என்னுடைய வருத்தமெல்லாம், கொள்கை, கோட்பாட்டில், உழைப்பில், உறுதியில், போராட்டக் குணத்தில் வலிமையாக உள்ள மூத்த நிர்வாகிகள் கூடதொண்டர்களை அரவணைப்பதில் சறுக்கிவிடுகிறார்கள். இன்னும் சிலர் இருக்கிறார்கள்... எதிர்க்கட்சிக்காரர்களைப் பார்த்தால் மலரும் முகம், நம்
கட்சிக்காரர்களைப் பார்த்தால் மலர்வது இல்லை. எதிர்க்கட்சிக்காரர்களைப் பார்த்தால் வணங்கும் கை, நம் கட்சிக்காரர்களைப் பார்த்தால் வணங்குவது இல்லை.
தனக்கு இணையாக யாரும் வளரக் கூடாது என நினைத்தால் அந்த மாவட்டத்தில அவர்கள் மட்டும் தான் இருப்பார்கள். இப்போது ஆட்சிக்கு வந்திருப்பவர்கள் எப்படிப்பட்டவர்கள்? மக்களுக்காக உழைக்காமல், போராட்டம் நடத்தாமல், கொள்கை இல்லாமல், நிர்வாகக் கட்டமைப்பு இல்லாமல், ஆட்சிக்குவந்திருக்கிறார்கள். இதைப் பார்த்து நாமும் அப்படி ஆக முடியாது; ஆகிவிடவும் கூடாது. நாம் நிரந்தரம். சலிப்பாக இருக்கிறது என நாம் அரசியலுக்கு வந்தவர்கள் இல்லை... போராட வந்தவர்கள்.
வெற்றி தோல்வியில் நம் இயக்கத்தின் வாழ்க்கை அடங்கி இருக்கப் போவது இல்லை. ஒரு தேர்தலில் தோற்றால் அடுத்த தேர்தல் வரும்வரை தூங்கி வழிவதுதான் மற்ற கட்சிகளின் வழக்கம். எதிர்க்கட்சியாக இருந்தாலும் சுணங்கிடாமல், மக்கள் நலனுக்காக சிறப்பாகச் செயல்படும் கட்சி திமுக என நம் எதிரிகளே சொல்வார்கள். ‘கம்பேக்’ கொடுப்பதில் நாம் சிறப்பானவர்கள். அதை சிறப்பாகக் கொடுப்போம்.
நம் கட்சிக்காரர்கள் முதலில் அவர்கள் வீட்டில் அரசியல் பேச வேண்டும். நம் பிள்ளைகள், நம் உறவினர்களிடம் முதலில் பரப்புரை மேற்கொள்ள வேண்டும்.
நம் உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் வாக்குகளை முழுமையாக வாங்க வேண்டும். இப்போதைய முதல்வர், நாம் கொண்டு வந்த எல்லா திட்டங்களுக்கும் பெயர் மாற்றுவதில் பிசியாக இருக்கிறார். சட்டப்பேரவையை சினிமா செட் என நினைத்து பஞ்ச் டயலாக் பேசிக் கொண்டிருக்கிறார்.
நம்மைப் பொறுத்தவரை வெற்றியோ தோல்வியோ, மக்களின் அன்றாட வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்தவர்கள். இனமும், மொழியும், நாடும் இருக்கும் வரை கருப்பு சிவப்புக் கொடி பறக்க வேண்டும் என்ற நினைப்புடன் நாம் உழைக்க வேண்டும் அப்படி, உழைக்கத் தேவையானவர்களைக் கட்சியில் அதிகம் சேர்க்க வேண்டும். எல்லோரும் சேர்ந்து உழைப்போம்; கட்சியை இன்னும் வலிமை கொண்டதாக வளர்த்தெடுப்போம். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.