கேசவன்
பள்ளிக்கரணை: வீட்டின் கழிவுநீர் தொட்டியைச் சுத்தம் செய்தபோது விஷவாயுவை சுவாசித்து இளைஞர் உயிரிழந்தார். அவரைக் காப்பாற்ற முயன்ற மற்றொருவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பள்ளிக்கரணை வீராசாமி தெருவில் ஐஸ்வர்யா என்பவரது வீட்டில் உள்ள கழிவுநீர் தொட்டியை அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் (49), கேசவன் (29) ஆகியோர் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தொட்டிக்குள் பரவியிருந்த விஷவாயுவை சுவாசித்த ராஜேஷ் தொட்டிக்குள் மயங்கினார்.
இதைக் கண்ட கேசவன், அவரைக் காப்பாற்றுவதற்காக தொட்டிக்குள் இறங்கியபோது அவரும் விஷவாயுவை சுவாசித்ததால் இவரும் தொட்டிக்குள் மயங்கினார்.
அக்கம் பக்கத்தினர் உதவியுடன் இருவரும் மீட்கப்பட்டனர். இதில் கேசவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மயக்க நிலையில் மீட்கப்பட்ட ராஜேஷ், சிகிச்சைக்காகத் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தகவலறிந்த பள்ளிக்கரணை போலீஸார், கேசவனின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக தாம்பரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.