சென்னை: பணம் கையாடல் குற்றச்சாட்டில் அறையில் அடைத்து தாக்கியதால், வேதனை அடைந்த இளைஞர் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சென்னை அண்ணா நகர் 20-வது மெயின் ரோட்டில் வசித்து வந்தவர் ஆகாஷ் (23). அண்ணா நகரில் செயல்பட்டு வரும் டிராவல்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி மாலை, அந்த நிறுவனத்தின் 4-வது மாடியிலிருந்து கீழே விழுந்து படுகாயமடைந்த அவர், அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், ஆகஸ்ட் 2-ம் தேதி அவர் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறிய ஆகாஷின் உறவினர்கள், அவர் தற்கொலை செய்திருக்க வாய்ப்பில்லை என்றும், சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்றும் அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன்பேரில் போலீஸார் வழக்குப் பதிவுசெய்து விசாரணையைத் தொடங்கினர். விசாரணையின் ஒரு பகுதியாக, சம்பவம் நடைபெற்ற அலுவலகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா (சிசிடிவி) பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டன.
அதில் சம்பவத்துக்கு முன்பு ஆகாஷை அலுவலகத்தின் 4-வது மாடியில் உள்ள ஓர் அறையில் சிலர் அடைத்து வைத்து தாக்கி விசாரித்த காட்சிகள் பதிவாகியிருந்தன. இதையடுத்து நிறுவன ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
முதற்கட்ட விசாரணையில், டிராவல்ஸ் நிறுவனத்தில் சுமார் ரூ.40 லட்சம் மாயமானது தொடர்பாக ஆகாஷ் மீது சந்தேகம் எழுந்ததாகவும், இதுகுறித்து நிறுவன உரிமையாளர் ஷெனாய் நகரைச் சேர்ந்த சுகுமார் (57), தனக்குத் தெரிந்த இருவரை அழைத்து வந்து ஆகாஷிடம் விசாரணை நடத்த ஏற்பாடு செய்திருந்ததாகவும் தெரிய வந்தது.
மேலும், அந்த இருவரும் ஆகாஷை தனி அறையில் வைத்து மிரட்டியதாகவும், தாக்கியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் பின்னர் மன உளைச்சலுக்கு ஆளான ஆகாஷ் 4-வது மாடியிலிருந்து குதித்ததாக போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸார், டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் சுகுமாரை கைதுசெய்து சிறையில் அடைத்தனர். இதே வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் மேலும் இருவரை தனிப்படை போலீஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.