சென்னை: பெரியமேட்டில் உள்ள தங்கும் விடுதியில் இளம் பெண்ணை கொலை செய்து இளைஞர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். உயிரிழந்தது காதலர்களா? என போலீஸார் விசாரிக்கின்றனர்.
பெரியமேடு குமாரப்பா தெருவில் தங்கும் விடுதி ஒன்று உள்ளது. அங்கு நேற்று முன்தினம் இளம் ஜோடி ஒன்று வந்து தனியாக அறை எடுத்துத் தங்கினர். சிறிது நேரத்தில் அந்த இளைஞர் மட்டும் காலை உணவு வாங்குவதற்கு வெளியே செல்வதாக லாட்ஜ் ஊழியர்களிடம் கூறிவிட்டுச் சென்றுள்ளார்.
சிறிது நேரத்தில் திரும்பிய இளைஞர் உணவு வாங்காமல் வந்துள்ளார். பின்னர் நீண்ட நேரமாகியும் இளம் ஜோடி வெளியேவராமல் இருந்துள்ளனர்.
சந்தேகமடைந்த தங்கும் விடுதி ஊழியர், இது தொடர்பாக நேற்று காலை 10.30 மணியளவில் மேலாளருக்கு தகவல் தெரிவித்தார்.
அவர் இது தொடர்பாக வேப்பேரி போலீஸாருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து போலீஸார் வந்து கதவை தட்டியபோது, திறக்கப்படவில்லை. மேலும் உள்ளே இருந்து எந்த தகவலும் வரவில்லை.
சந்தேகம் அடைந்த போலீஸார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது இளைஞர் தூக்கில் தொங்கிய நிலையிலும், இளம் பெண் கழுத்து அறுபட்ட நிலையிலும் இறந்து கிடந்தனர்.
இருவரது சடலங்களையும் போலீஸார் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அறையில் கிடந்த அடையாள அட்டைகளைக் கைப்பற்றி விசாரித்தபோது கொலை செய்யப்பட்ட இளம் பெண் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியைச் சேர்ந்த பவ்யா (21) என்பதும், இளைஞர் சென்னை ராமாபுரத்தைச் சேர்ந்த பாரதி பெருமாள் (21) என்பதும் தெரியவந்தது.
இருவரின் குடும்பத்தினருக்கும் போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர். இளம் பெண்ணை கொலை செய்து பாரதி பெருமாள் தற்கொலை செய்திருக்க வாய்ப்பு உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். மேலும் கொலை, தற்கொலைக்கான காரணம் என்ன என்றும் பெரியமேடு போலீஸார் வழக்குப்பதிந்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.