கைதான சஞ்சீவ்காந்தி, கொலையான மாலினி, ரஞ்சித்குமார்.
திருப்பத்தூர்: திருப்பத்தூர் அடுத்த தோரணம்பதி பகுதியில் உள்ள காலி வீட்டுமனை பிரிவு ஒன்றில் நேற்று முன்தினம் ஆணும், பெண்ணும் கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர். திருப்பத்தூர் கிராமிய காவல் துறையினர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
இதில், கொலையானவர்கள் திருவண்ணாமலை மாவட்டம் பாச்சல் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித்குமார் (30), திருப்பத்தூர் மாவட்டம் திப்பசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த சிரஞ்சீவி என்பவரின் மனைவி மாலினி (30) என்பது தெரியவந்தது. இரட்டை கொலை தொடர்பாக செங்கம் பகுதியைச் சேர்ந்த தொழிலாளி சஞ்சீவ் காந்தி (35) என்பவரை கைது செய்தனர்.
கொலைக்கான காரணம் குறித்து காவல் துறையினர் கூறும்போது, “திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியைச் சேர்ந்த மாலினிக்கும், திருப்பத்தூர் அடுத்த திப்பசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த சிரஞ்சீவிக்கும் கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இவர்களுக்கு 13 வயதில் பெண் குழந்தையும், 11 வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர். மாலினி பள்ளியில் படிக்கும்போதே சஞ்சீவ் காந்தி என்பவருடன் காதல் ஏற்பட்டுள்ளது. ஆனால், குடும்பத்தினர் ஏற்பாட்டில் சீரஞ்சிவியுடன் திருமணம் நடந்ததால், சஞ்சீவ் காந்தியுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்துள்ளார்.
இதற்கிடையில், திருவண்ணாமலை மாவட்டம் பாச்சல் பகுதியைச் சேர்ந்த உறவினரான ரஞ்சித்குமார் (30) என்பவருடன் திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டுள்ளது. இதனால், சஞ்சீவ் காந்தியுடனான தொடர்பை மாலினி துண்டித்துள்ளார்.
இதுதொடர்பாக, இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. கொலை நடந்த அன்று மாலினியை கைபேசியில் தொடர்புகொண்டு சஞ்சீவ் காந்தி பேசியுள்ளார். அப்போது, தான் ரஞ்சித்துடன் காரில் தோரணம் பகுதியில் உள்ள காலி வீட்டுமனை பிரிவு பகுதியில் இருப்பதாக கூறியுள்ளார். இதைக்கேட்டு, ஆத்திரம் அடைந்த சஞ்சீவ் குமார், அங்கு சென்று மாலினியுடன் தகராறில் ஈடுபட்டதுடன் மறைத்து வைத்திருந்த கத்தியால் ரஞ்சித்குமாரை வெட்டியுள்ளார். இதனை தடுக்க வந்த மாலினியையும் வெட்டிவிட்டு தப்பியுள்ளார்’’ என்றனர்.