க்ரைம்

பூந்தமல்லி தவெக வேட்பாளர் பாலியல் தொல்லை அளித்ததாக எஸ்.பி. அலுவலகத்தில் மகளிரணி நிர்வாகி புகார்

செய்திப்பிரிவு

திருவள்ளூர்: பூந்​தமல்லி சட்​டப்​பேரவை தொகுதி தமிழக வெற்​றிக் கழக வேட்​பாளர் தனக்கு பாலியல் தொல்லை அளித்​த​தாக, அக்​கட்​சி​யின் மகளிர் அணி நிர்​வாகி திரு​வள்​ளூர் எஸ்​.பி. அலு​வல​கத்​தில் புகார் அளித்​துள்​ளார்.

தமிழக வெற்​றிக் கழகத்​தின் திரு​வள்​ளூர் தெற்கு மாவட்ட செய​லா​ள​ராக இருப்​பவர் பிர​காசம் என்​கிற குட்​டி. இவரை நேற்று முன் தினம் பூந்​தமல்லி (தனி) தொகு​தி​யின் தமிழக வெற்​றிக் கழக வேட்​பாள​ராக, அக்​கட்​சி​யின் தலை​வர் விஜய் அறி​வித்​தார்.

          

இந்​நிலை​யில், பிர​காசம் தனக்கு பாலியல் தனக்கு பாலியல் தொல்லை அளித்​த​தாக, அக்​கட்​சி​யின் மகளிர் அணி நிர்​வாகி நேற்று திரு​வள்​ளூர் எஸ்​.பி. அலு​வல​கத்​தில் அளித்​த புகாரில் தெரி​வித்​துள்​ள​தாவது: தமிழக வெற்​றிக் கழகத்​தின் திரு​வள்​ளூர் தெற்கு மாவட்ட மகளிர் அணி நிர்​வாகி​யாக நான் இருந்து வரு​கிறேன்.

இந்​நிலை​யில், கடந்த ஜூன் 8-ம் தேதி திரு​வள்​ளூரில் உள்ள திருமண மண்​டபம் ஒன்​றில் நடந்த எங்​கள் கட்சி நிர்​வாகி​யின் திருமண வரவேற்பு நிகழ்ச்​சி​யில் எங்​கள் கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர் புஸ்ஸி ஆனந்த் பங்​கேற்​றார்.

அந்​நிகழ்​வில் நானும் பங்​கேற்​றேன். அப்​போது, விழா மேடை​யில், எங்​கள் கட்​சி​யின் திரு​வள்​ளூர் தெற்கு மாவட்ட செய​லா​ளர் பிர​காசம் அரு​கில் நான் நின்று கொண்​டிருந்​தேன். அப்​போது, பிர​காசம் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்​தார்.

இதுகுறித்​து, தட்​டிக்​கேட்ட என் கணவருக்​கும், எனக்​கும் பிர​காசம் கொலை மிரட்​டல் விடுத்​தார். இதுதொடர்​பாக எங்​கள் கட்​சி​யின் தலை​மை​யிடம் புகார் அளித்​துள்​ளேன்.

ஆனால், அவர் மீது கட்சி தலைமை ஒழுங்கு நடவடிக்கை எடுக்​க​வில்​லை. ஆகவே, பிர​காசம் மீது வழக்​குப் பதிவு செய்​து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்​டும். இவ்​வாறு அவர் புகாரில் தெரி​வித்​துள்​ளார்.

இப்புகாரை மறுத்​து, பிர​காசத்தின் மனைவி சுகுணா, மகளிர் அணி நிர்​வாகி​கள் திரு​வள்​ளூர் எஸ்​.பி. அலு​வல​கத்​தில் நேற்று மனு அளித்​தனர்.

அதில், “தமிழக வெற்​றிக் கழகத்​தின் மாவட்ட மகளிர் அணி​யின் முக்​கிய நிர்​வாகி பதவியை வாங்கி தரக் கோரி, மகளிர் அணி நிர்​வாகி பிர​காசத்​திடம் பிரச்​சினை செய்து வந்​தார்.

அப்​ப​த​வியை வாங்கி தராத​தால் பிர​காசம் மீது அவர் பொய்​யான புகார் தெரி​வித்​துள்​ளார். கட்​சி​யில் உள்ள ஒரு சிலரே பிர​காசத்​துக்கு எதி​ராக அந்த பெண் நிர்​வாகியை தூண்டி விட்​டுள்​ளனர். ஆகவே, பொய்​யான புகார் கொடுத்த பெண் நிர்​வாகி மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்​டும்” என தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT