சபீக் ரஹ்மான், ரவிச்சந்திரன்
சென்னை: திருச்சி ஒருங்கிணைந்த குற்றப்பிரிவு போலீஸாருக்கு, சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் கள்ளநோட்டுகள்கைமாற இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, திருச்சி ஒருங்கிணைந்த குற்றப் பிரிவு போலீஸார், சென்னை ஒருங்கிணைந்த குற்றப்பிரிவு போலீஸார் இணைந்து நேற்றுமுன்தினம் சோதனை நடத்தினர்.
அப்போது, விடுதி அறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.11.90 லட்சம் மதிப்பிலான கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில்,கள்ளநோட்டுகளை பதுக்கி வைத்திருந்ததாகக் கூறப்படும் சென்னையில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வரும் சபீக் ரஹ்மான் (37) என்பவரது வீட்டில் போலீஸார் சோதனை நடத்தினர்.
அப்போது, ரூ.11.21 லட்சம் அசல் இந்திய ரூபாய் நோட்டுகள் மற்றும் சுமார் ரூ.34 லட்சம் மதிப்புள்ள 25 ஆயிரம் யூரோ அசல் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர், சபீக் ரஹ்மான் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த கள்ளநோட்டுகள் தஞ்சை மாவட்டம், வெட்டிக்காடு பகுதியைச் சேர்ந்த விவசாயி ரவிச்சந்திரன் (40) மூலம் கிடைத்தது தெரியவந்தது. இதையடுத்து, தனிப்படை போலீஸார் ரவிச்சந்திரனை கைது செய்தனர்.
அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.22.80 லட்சம் அசல் பணம், 4 பாஸ்போர்ட்டுகள் மற்றும் ரூ.9 ஆயிரம் மதிப்பிலான கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
பின்னர், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ரவிச்சந்திரன் கடந்த சில ஆண்டுகளாக மலேசியாவில் பணியாற்றிய போது, அங்குள்ள கால்டாக்சி ஓட்டுநர்கள் மூலம் செயல்பட்ட கள்ளநோட்டு கும்பலுடன் தொடர்பு ஏற்படுத்தி உள்ளார்.
பின்னர், கமிஷன் அடிப்படையில் கள்ளநோட்டுகளை இந்தியாவுக்கு கடத்தி விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. சென்னைக்கு வந்தபோது டிராவல்ஸ் உரிமையாளர் சபீக் ரஹ்மானுடன் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் இணைந்து கள்ளநோட்டுகளை மாற்றும் பணியில் ஈடுபட்டு வந்ததாக விசாரணையில் தெரிய வந்தது.
சமீபத்தில் மலேசியாவில் செயல்படும் கும்பல், கள்ள நோட்டுகளை ஒரு பெண் மூலம் சென்னைக்கு அனுப்பி வைத்ததாகவும், அந்த பெண் சபீக் ரஹ்மானிடம் ரூ.1.10 கோடி மதிப்பிலான கள்ளநோட்டுகளை ஒப்படைத்துவிட்டு சென்றதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அந்த பெண் யார் என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.இந்த வழக்கில், சர்வதேச கள்ளநோட்டு கும்பலின் தொடர்பு இருப்பதாக சந்தேகம் உள்ளதால், சிபிசிஐடி போலீஸாரும் விசாரணையை தொடங்கி உள்ளனர்.