சென்னை: மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சதுக்கம் பின்புறம் கல்லுக்குட்டை என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரது சடலம் கிடப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அண்ணா சதுக்கம் போலீஸார் அங்கு விரைந்தனர். அங்கு சுடிதார் அணிந்த பெண் சடலம், தலை துண்டிக்கப்பட்டு அழுகிய நிலையில் கிடந்தது.
இதையடுத்து அந்த பெண்ணின் சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர்.
இறந்த பெண் யார், எந்த பகுதியைச் சேர்ந்தவர் என உடனடியாக தெரியவில்லை.
அவர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டு கடலில் வீசப்பட்டாரா அல்லது கடல் அலையில் சிக்கி உயிரிழந்து பாறைகளுக்கு இடையே சிக்கி தலை துண்டானதா என போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
மேலும், தமிழகம் முழுவதும் காணாமல் போன பெண்களில் விவரங்களை பெற்றும் விசாரித்து வருகின்றனர்.