சென்னை: ரூ.11 லட்சத்தை மீட்டுத் தர வேண்டும் எனக் கூறி, காவல் ஆணையர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை, பட்டாளம் பகுதியைச் சேர்ந்தவர் ஷகீலா (51). இவர் நேற்று காலை, வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலக நுழைவாயிலில் மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொள்ள முயன்றார்.
இதை கண்டு, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை மீட்டனர். அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
முன்னதாக, ஷகீலா செய்தியாளர்களிடம் கூறுகையில், மஸ்கட்டில் 20 ஆண்டுகளாக வீட்டு வேலை செய்து வந்தேன். அப்போது, அங்கு சூப்பர் மார்க்கெட் நடத்தி வந்த கேரளாவைச் சேர்ந்த ஒருவர் எனக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்தார். நாங்கள் கணவன், மனைவியாக குடும்பம் நடத்தினோம்.
தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது எனக் கூறி, பல்வேறு தவணைகளாக ரூ.11 லட்சம் வரை பெற்றுக் கொண்டார். வழக்கம்போல் நாங்கள் அண்மையில் சென்னை வந்தோம்.
அப்போது, என்னை விட்டு விட்டு, அவர் மட்டும் வெளிநாடு சென்று விட்டார். அவரை தற்போது தொடர்பு கொள்ள முடியவில்லை. எனவே, என்னிடம் அவர் மோசடி செய்த பணத்தை திரும்ப பெற்றுத் தர வேண்டும்.
இதுகுறித்து, காவல் துறையில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து தீக்குளிக்க முயன்றேன் என்றார்.