மீனா
ஆவடி: தொழிலதிபரிடம் ரூ.2.65 கோடி மோசடி செய்தது தொடர்பாக பெண் ஒருவரை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
திருமுல்லைவாயல், திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் மணி (67). தனியார் நிறுவனம் நடத்தி வரும் இவருக்கு கடந்த ஜூலையில், சென்னை, முகப்பேர் பகுதியைச் சேர்ந்த மீனா (41), சங்கர் ஆகியோர் அறிமுகமாகினர். அவர்கள் இருவரும் சமையல் பருப்பை தூய்மை செய்யும் இயந்திரத்தை வாங்கி தொழில் செய்தால், அதிக லாபம் கிடைக்கும் என, மணியிடம் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, சமையல் பருப்பை தூய்மை செய்யும் தொழிலில் ஈடுபட திட்டமிட்ட மணி, வங்கி கடன் பெறுவதற்காக, சமையல் பருப்பை தூய்மை செய்யும் இயந்திரம் வாங்குவதற்கு தனியார் நிறுவனத்திடம் விலை பட்டியலை பெற்று வங்கிக்கு அனுப்பியுள்ளார். இந்நிலையில், மீனாவும், சங்கரும், மணிக்கு தெரியாமல் அவரது நிறுவன மின்னஞ்சலை முறைகேடாகப் பயன்படுத்தி வேறொரு தனியார் நிறுவனத்தின் பெயரில் தயாரிக்கப்பட்ட விலைப்பட்டியலை வங்கிக்கு மீண்டும் அனுப்பியுள்ளனர்.
அவ்வாறு அனுப்பப்பட்ட விலைப்பட்டியலின் அடிப்படையில், சுமார் ரூ.2. 65 கோடியை வங்கியில் பெற்ற மீனாவும், சங்கரும் உறுதி அளித்தபடி, சமையல் பருப்பை தூய்மை செய்யும் இயந்திரத்தை வாங்கித் தராமல், வங்கியிலிருந்து பெறப்பட்ட முழுத் தொகையையும் கையாடல் செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து மணி அளித்த புகாரின் பேரில் ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து முதல் கட்ட விசாரணை நடத்தினர். அதன் அடிப்படையில், காவல் ஆய்வாளர் செங்குட்டுவன் தலைமையிலான தனிப்படை போலீஸார், மீனாவை நேற்று முன் தினம் கைது செய்தனர். மேலும், ஆந்திர மாநிலத்தில் தலைமறைவாக உள்ள சங்கரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.