சென்னை: இலங்கை செல்லும் விமானத்தில் பயணிக்க சென்னை விமான நிலையத்துக்கு வந்த பெண் ஒருவர் மீது போலீஸாருக்கு சந்தேகம் எழுந்தது. அவரை சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள போலி பாஸ்போர்ட் புலனாய்வுப் பிரிவு போலீஸார் விசாரித்தனர்.
அப்போது, அந்த பெண்ணின் பெயர் பேபி லோனா (48). இலங்கை நாட்டுக் குடியுரிமை பெற்றவர். இந்தியரான முஸ்தாக்அகமது என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
2015-ம் ஆண்டு இலங்கையிலிருந்து விமானம் மூலம் இந்தியா வந்து அகதியாக தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூரில் வாடகை வீட்டில் கணவருடன் வசித்து வந்துள்ளார்.
பின்னர் அவர் இலங்கை பிரஜை என்பதை மறைத்து ஆதார் கார்டு, பான் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டையைப் பெற்றுள்ளார். அதை அடிப்படையாக வைத்து, இந்தியர் என இந்திய பாஸ்போர்ட் பெற்று தற்போது இலங்கைக்கு தப்ப முயன்றது தெரியவந்தது.
அவரை சென்னை பன்னாட்டு விமான நிலைய வெளிநாட்டவர் பதிவு மண்டல அலுவலர் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளார். இதையடுத்து பேபி லோனாவை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்து சிறையில் அடைத்தனர்.