கைதான பூஜா ஜெயின்
சென்னை: தனியார் நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்தால் 30 சதவீதம் வரை வட்டி கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறி ரூ.23 லட்சம் பெற்று மோசடி செய்த பெண்ணை சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னையைச் சேர்ந்த ஹேமா பிரியதர்ஷினி (40) என்பவருக்கு, அவரது உறவினர் சரவணன் மூலம் கடந்த 2024-ம் ஆண்டு பார்க் டவுன், மின்ட் தெருவைச் சேர்ந்த பூஜா ஜெயின் (39) என்பவர் அறிமுகமானார். அப்போது பூஜா ஜெயின், தான் தனியார் நிதி நிறுவனம் நடத்தி வருவதாகவும் அதில் முதலீடு செய்தால் மாதந்தோறும் 25 முதல் 30 சதவீதம் வரை வட்டி கிடைக்கும் என்றும் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
இதை உண்மை என நம்பிய பிரியதர்ஷினி பல்வேறு தவணைகளில் ரூ.23 லட்சம் முதலீடு செய்துள்ளார். முதலில் உறுதி அளித்தபடி வட்டிப் பணம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், பின்னர் நிறுவனம் நஷ்டத்தை சந்தித்ததாகக் கூறி வட்டிப் பணம் வழங்கப்படவில்லை. மேலும் முதலீடு செய்யப்பட்ட பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை.
தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பிரியதர்ஷினி இதுகுறித்து சென்னை மேற்கு மண்டல சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.
‘விசாரணையில், பூஜா ஜெயின் கடந்த 2019-ம் ஆண்டு முதல் தனியார் வங்கிகளில் வாடிக்கையாளர் தொடர்பு மேலாளராக (ரிலேஷன்ஷிப் மேனேஜர்) பணியாற்றி வந்துள்ளார். அந்த பணியின் மூலம் வங்கி வாடிக்கையாளர்களின் விவரங்களை தெரிந்து கொண்டு, அவர்களை தொடர்பு கொண்டு தனது நிறுவனத்தில் முதலீடு செய்ய வைத்து மோசடி செய்துள்ளார். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை தொடர்ந்து தேடி வருகிறோம்’ என போலீஸார் தெரிவித்தனர்.