க்ரைம்

தேனி சிறையில் கைதிகள் தப்ப மூளையாக செயல்பட்ட மதுரை கைதி சகோதரர்களுக்கு உதவியது யார்?

போலீஸார் தீவிர விசாரணை

என்.கணேஷ்ராஜ்

தேனி: தேனியில் தப்பிய மற்ற கைதிகளுக்கு செருப்பு இல்லாததால் மலைப்பகுதியிலே பிடிபட்டனர். ஆனால் கடைசியாக பிடிபட்ட 2 கைதிகளும் செருப்பு அணிந்து, வழக்கறிஞரை ஏற்பாடு செய்து சரணடைவது வரை சென்றது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.

தேனி சிறையில் இருந்து 17 பேர் கடந்த 26-ம் தேதி தப்பினர். நேற்று வரை 13 கைதிகள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். மீதம் 4 பேர் பிடிபடுவதில் இழுபறி இருந்தது. இதனைத் தொடர்ந்து இன்று காலையில் பொன்முத்து, ரெஜின் ஆகியோர் பிடிபட்டனர். தப்பிய திட்டத்துக்கு மூளையாகச் செயல்பட்டவர்கள் மதுரையைச் சேர்ந்த திருப்பதி, மீனாட்சி சுந்தரம் (இருவரும் சகோதரர்கள்) ஆகியோர்தான். எனவே இவர்களை பிடிப்பதில் போலீஸார் பெரும் முனைப்பு காட்டி வந்தனர்.

இந்நிலையில் இன்று மாலையில் கூடலூர் வடக்கு காவல் நிலையத்தில் வழக்கறிஞர்களுடன் வந்து சரண அடைய புறப்பட்டனர். ஆனால் வரும் வழியிலேயே இருவரையும் போலீஸார் கைது செய்தனர். மற்றவர்கள் எல்லாம் சிறைக்கு அருகில் உள்ள மலைப்பகுதியிலேயே பிடிபட்டனர். காரணம், செருப்பு இல்லாததால் அவர்களால் முள், புதர்களைக் கடந்து வெகுதூரம் செல்ல முடியவில்லை.

ஆனால் கடைசியாக பிடிபட்ட இவர்களை கைது செய்த போது இவர்கள் செருப்பு அணிந்திருந்தனர். இதனால்தான் மலையை விட்டு அதிக தூரம் செல்ல முடிந்தது. மேலும் டூவீலரில் வந்தவரை தாக்கி அதன் மூலம் கூடலூர் வரை சென்றதாக தெரிகிறது. அதற்கான பெட்ரோல் வண்டியில் இருந்ததா, பாதியிலேயே விட்டு விட்டு வந்தார்களா அல்லது வேறு யாரேனும் உதவினார்களா என்பதும் சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.

இதைவிட வழக்கறிஞர்களுடன் பேசி ஆவணங்களை தயார் செய்து சரணடைய சென்றதும் பல்வேறு யூகங்களை ஏற்படுத்துகிறது. இதற்காக யாருடைய செல்போன் பயன்படுத்தப்பட்டது, தப்பிய இடத்தில் இருந்து சுமார் 70 கி.மீ. தூரம் வரை சரணடையச் சென்றது உள்ளிட்டவை போலீஸாருக்கு பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.

கஞ்சா தொடர்பான வழக்குகள் இவர்கள் மீது உள்ளதால், கோடாங்கிபட்டியில் உள்ள கஞ்சா வியாபாரி மூலம் பல்வேறு உதவிகளை பெற்றிருக்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. சுட்டுப்பிடிப்போம் என போலீஸ் மூலமே திட்டமிட்டு தகவல் பரப்பப்பட்டதே இவர்கள் விரைவில் சிக்கியதற்கும் காரணம்.

இந்த தகவல் உறவினர்கள், வழக்கறிஞர் என அனைவர் மூலமும் கைதிகளுக்கு சென்றடைந்ததால், உயிருக்கு ஆபத்து என்ற நிலையிலிருந்து தங்களை காத்துக்கொள்ள சரணடைய முடிவு செய்தனர். சரணடைய சம்மதித்தால் அது தங்களுக்கு மரியாதையாக இருக்காது என்பதால், நோட்டமிட்டு முன்னதாகவே போலீஸார் கைது செய்தனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT