திருவாரூர்: நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் தங்கும் விடுதிக்கும், வாய்க்காலுக்கும் இடையே பாலம் கட்ட அனுமதி அளிக்க ரூ.3 லட்சம் லஞ்சம் வாங்கியதாக திருவாரூர் நீர்வளத் துறை உதவி செயற்பொறியாளர் மற்றும் உதவிப் பொறியாளர் கைது செய்யப்பட்டனர்.
வேளாங்கண்ணியைச் சேர்ந்தவர் அபினேஷ் (26). இவர், வேளாங்கண்ணியில் தங்கும் விடுதி கட்டி வருகிறார். இவரது விடுதிக்கு எதிரே வாய்க்காலை கடக்க பாலம் கட்டிக் கொள்ள அனுமதி கோரி திருவாரூரில் உள்ள நீர்வளத் துறை வெண்ணாறு வடிநில கோட்டச் செயற்பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.
இதற்கு வடிநில கோட்ட உதவி செயற்பொறியாளர் மாணிக்கவேல், உதவிப் பொறியாளர் வினோத் ஆகியோர் ரூ.3 லட்சம் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அபினேஷ், திருவாரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸில் புகார் அளித்தார்.
இதைத்தொடர்ந்து, போலீஸாரின் வழிகாட்டலின்படி, நேற்று இருவரிடமும் ரசாயனம் தடவிய ரூ.3 லட்சம் பணத்தை அபினேஷ் அளித்தார். அப்போது டிஎஸ்பி நந்தகோபால்தலைமையிலான லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் 2 பேரையும் கையும், களவுமாக கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடக்கிறது.