திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் கிரிவலம் வந்த 2 இளம் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வழிப்பறி செய்த 8 பேர் கொண்ட கும்பலிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலையைச் சேர்ந்த கூலி தொழிலாளியின் மகளான 23 வயது இளம்பெண், சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். மே 31-ம் தேதி இரவு பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலைக்கு கிரிவலம் வந்துள்ளார். பின்னர் இரவு நேரத்தில் திருக்கோவிலூர் புறவழிச் சாலையில் சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள், அப்பெண்ணை வழிமறித்து மிரட்டி காதில் அணிந்திருந்த தங்கக்கம்மலை கழற்றி வாங்கியுள்ளனர்.
பின்னர், அவரை மறைவான பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். மேலும் சில இளைஞர்களை வரவழைத்து மொத்தம் 8 பேர் கொண்ட கும்பல் பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது. பின்னர், அந்த பெண்ணை ஆபாசமாக வீடியோ எடுத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இந்தக் கும்பல், மே 30-ம் தேதி இரவு தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த திருமணமான பெண் கிரிவலம் முடித்து விட்டு உறவினருடன் இருசக்கர வாகனத்தில் செங்கம் சாலை வழியாக தருமபுரிக்கு சென்று கொண்டிருந்த போது பெரியகோளாப்பாடி அருகே வழிமறித்து பாலியல் தொந்தரவு கொடுத்து, பின்னர் அவரது கழுத்தில் இருந்த 2 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு ஆபாச வீடியோ எடுத்து மிரட்டியுள்ளனர்.
இதையடுத்து 2 பெண்களும் திருவண்ணாமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் உத்தரவின் பேரில், டிஎஸ்பி ராஜன் தலைமையில் தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தினர்.
இதில், திருவண்ணாமலை அடுத்த ஆடையூர் கிராமத்தைச் சேர்ந்த வாசுதேவன், பெரிய பாலியப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஆகாஷ் மற்றும் 16 வயது சிறுவன், அஸ்வநாதசுரனை கிராமத்தைச் சேர்ந்த அப்பு, ஹரிகரன், சர்மா, சேந்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த அருண்குமார், திருவண்ணாமலை பாலாஜி நகரைச் சேர்ந்த சூர்யா ஆகிய 8 பேரை கைது செய்தனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய மூவரை தேடி வருகின்றனர்.