கோப்புப் படம்
சென்னை: மயிலாப்பூர் போலீஸார் கடந்த மாதம் 24-ம் தேதி அதே பகுதி பிடாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த வனிதா (36) என்ற பெண் தண்ணீர் கேன் போடுவதுபோல் நடித்து, 20 லிட்டர் கேனில் சட்டவிரோதமாக சாராயம் விற்பனை செய்து வந்ததாக கூறி அவரைக் கைது செய்தனர்.
ஆந்திராவிலிருந்து சாராயத்தை வாங்கி வந்து, மயிலாப்பூரில் பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் திடீர் திருப்பமாக, மாமூல் கொடுக்க மறுத்ததால் மயிலாப்பூர் காவல் துணை ஆணையரின் தனிப்படையைச் சேர்ந்த 3 போலீஸார் வனிதாவை சிக்க வைத்திருப்பது தெரியவந்தது.
அதாவது குற்றச்சாட்டுக்கு உள்ளான வனிதா மீது ஏற்கெனவே மதுபாட்டில்கள் விற்பனை செய்தது தொடர்பாக 10 குற்ற வழக்குகள் உட்பட 12 வழக்குகள் உள்ளன.
தற்போது அவர் திருந்தி வாழ்வதுடன், வீடு வீடாக தண்ணீர்கேன் போட்டு வாழ்க்கையை நடத்தி வருகிறார். இந்நிலையில்தான் அவரிடம் தனிப்படையைச் சேர்ந்த போலீஸார் மாமூல் கேட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக உயர் போலீஸ் அதிகாரிகள் விசாரித்தனர். இதில் போலீஸார் மீதான குற்றச்சாட்டு உண்மை என தெரியவந்ததை அடுத்து, தனிப்படையைச் சேர்ந்த தலைமைக் காவலர் வினோத் குமார் (ஜாம்பஜார் காவல் நிலையம்), முதல்நிலை காவலர் பிரகலநாதன் (ராயப்பேட்டை காவல் நிலையம்), முதல்நிலை காவலர் செல்வகுமார் (பட்டினப்பாக்கம்) ஆகிய 3 பேர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டனர்.
பின்னர் பிரகலநாதன், செல்வகுமார் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். வினோத் குமார் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.