சென்னை: வியாசர்பாடி காந்தி நகரைச் சேர்ந்தவர் மெல்வின் (36). காங்கிரஸ் கட்சியின் மனித உரிமைப் பிரிவு மாநிலச் செயலராக இருக்கும் இவர் நேற்று வியாசர்பாடி மேல்பட்டி பொன்னப்பன் தெருவில் உள்ள பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் போட்டார்.
பின்னர் அதற்குரிய பணத்தை கொடுப்பதற்காக காரை விட்டு கீழே இறங்கிச் சென்றார். அப்போது ஒரு நபர் அந்த காரை ஓட்டிச் சென்றுவிட்டார். மெல்வின் உடனடியாக போலீஸில் புகார் தெரிவித்தார்.
காரிலிருந்த மெல்வினின் செல்போன் ஜிபிஎஸ் சேவையின் மூலம், கார் எங்கு செல்கிறது என்பதை போலீஸார் கண்டறிந்து அதை பின் தொடர்ந்தனர். இதில் கார் கும்மிடிப்பூண்டி சென்றுவிட்டு, மீண்டும் புழல் அருகே நிற்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸார் அங்கு விரைந்தனர். போலீஸாரை பார்த்ததும், காரை அங்கேயே நிறுத்திவிட்டு அந்த நபர் தப்பியோடினார். போலீஸார் காரை மீட்டு மெல்வினிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில் காரை கடத்தியது கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்த சூர்யா (25), அவரது கூட்டாளி மணலியைச் சேர்ந்த பரத் (28) என்பது தெரியவந்தது. போலீஸார் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.