ராஜேந்திரன், ரவிகுமார்
சென்னை: தி.நகரில் ஒரே இடத்தில் பணியாற்றும் 2 பேர் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்ட சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். தி.நகர் தியாகராய சாலையில் நேற்று முன்தினம் இரவு ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்தார். இதைக் கண்ட அப்பகுதி மக்கள் மாம்பலம் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.
போலீஸார் சென்று பார்த்தபோது சம்பந்தப்பட்ட நபர் இறந்து கிடந்தது தெரிந்தது. இதையடுத்து உடலை மீட்ட போலீஸார் பிரேதப் பரி சோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் சடலமாகக் கிடந்தவர், தி.நகர் கண்ணம்மாபேட்டையைச் சேர்ந்த ராஜேந்திரன் (50) என்பதும், அவர் தி.நகரில் உள்ள விஜயா மஹாலில் துப்புரவுப் பணியாளராக வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.
மேலும் நேற்று முன்தினம் மாலை சம்பவ இடத்துக்கு அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தியபோது, அங்கு இருந்த தேனாம்பேட்டை கங்கைக்கரைபுரத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் பாலாஜியுடன் (34) ராஜேந்திரனுக்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
பின்னர் ராஜேந்திரன் அங்கிருந்து சென்றபோது, பாலாஜி அவரை வழிமறித்து தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் கீழே விழுந்த ராஜேந்திரனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, சுயநினைவை இழந்து பின்னர் உயிரிழந்ததாக போலீஸார் தெரிவித்தனர். இதையடுத்து பாலாஜியை போலீஸார் கைது செய்தனர்.
துப்புரவு மேஸ்திரி
விஜயா மஹால் திருமண மண்டபத்தின் பின்புறத்தில் ஒருவர் தலையில் ரத்தக் காயங்களுடன் கிடப்பதாக நேற்று முன்தினம் இரவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார், காயமடைந்த நபரை 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், காயமடைந்தவர் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ரவிகுமார் (46) என்பதும், அவர் இங்கு திருமண நிகழ்ச்சிகளுக்கான துப்புரவுப் பணியாளர்களை அழைத்து வரும் மேஸ்திரியாக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.
விஜயா மஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சிக்காக பணியாளர்களை அழைத்து வந்து வேலை செய்து கொண்டிருந்தபோது, தன்னிடம் வேலை பார்த்த கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலைச் சேர்ந்த மணி என்ற சொர்ணகுமாரை (65) வேலை தொடர்பாக ரவிகுமார் பலமுறை கண்டித்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த மணி சம்பவத்தன்று வேலை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது கட்டையால் ரவிகுமாரை தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளார். இதையடுத்து கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீஸார், மணியை கைது செய்தனர்.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரவிகுமார் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதையடுத்து இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.
கொலை செய்யப்பட்ட ராஜேந்திரன் மற்றும் ரவிகுமார் இருவரும் தி.நகரில் உள்ள விஜயா மஹாலில் பணியாற்றி வந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. ஒரே நாளில் ஒரே பணியிடத்துடன் தொடர்புடைய 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.