சென்னை: தடை செய்யப்பட்ட மாஞ்சா நூலில் காற்றாடி பறக்கவிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
மாஞ்சா நூலை பயன்படுத்தி காற்றாடி பறக்கவிடுவதால் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு உயிரிழப்பை ஏற்படுத்தும் விபத்துகளுக்கான அபாயம் இருப்பதால், சென்னை காவல்துறை மாஞ்சா நூலை தயாரித்தல், விற்பனை செய்தல் மற்றும் மாஞ்சா நூலை பயன்படுத்தி காற்றாடி பறக்கவிட தடை விதித்துள்ளது.
இந்நிலையில் புதுவண்ணாரப்பேட்டை சிவன் நகர் 3-வது தெருவில் புதுவண்ணாரப்பேட்டை போலீஸார் நேற்று முன்தினம் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அங்கு மாஞ்சா நூலை பயன்படுத்தி காற்றாடி பறக்க விட்டுக் கொண்டிருந்த 2 பேரை பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். விசாரணையில் பிடிபட்டவர்கள் புதுவண்ணாரப்பேட்டை சிவன் நகரைச் சேர்ந்த சூர்யா (20), பிரசாந்த் (21) என்பது தெரியவந்தது.
இதையடுத்து, இருவரை யும் போலீஸார் கைது செய் தனர். மேலும், விசாரணையில் அவர்கள் ஆன்லைன் மூலம் காற்றாடிகளையும், மாஞ்சா நூலையும் வாங்கியிருப்பது தெரியவந்தது.