கேளம்பாக்கம்: கேளம்பாக்கம் அருகே தையூர் பகுதியில் 21 வயதுடைய பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் சிறிது மன நலம் பாதிக்கப்பட்டவர் என்பதால், பெற்றோர் அவரை வீட்டில் விட்டு தினமும் வேலைக்கு சென்று விடுவர்.
இதற்கிடையில், அப்பெண் அடிக்கடி மயங்கி வாந்தி எடுத்து வந்துள்ளார். நேற்று காலையிலும் திடீரென மயங்கி வாந்தி எடுத்துள்ளார். இதனால், பெற்றோர்கள் மகளை அழைத்துக் கொண்டு கோவளம் பகுதி தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு அவருக்கு பரிசோதனை மேற்கொண்டதில், 3 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து, பெற்றோர்கள் கேளம்பாக்கம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
போலீஸார் விசாரணை மேற்கொண்டதில், பாதிக்கப்பட்ட பெண் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அப்பகுதியை சேர்ந்த இரண்டு சிறுவர்கள் அடிக்கடி வீட்டிற்கு சென்று பாலியல் வன்கொடுமை செய்தது தெரிந்தது. இதையடுத்து, இரண்டு சிறுவர்களை போலீஸார் கைது செய்தனர்.