அமுல், பாக்கியலட்சுமி

 
க்ரைம்

அழகு நிலைய உரிமையாளரிடம் ரூ.20 ஆயிரம் லஞ்சம்: திருமுல்லைவாயல் காவல் நிலைய பெண் உதவி ஆய்வாளர்கள் இருவர் கைது

செய்திப்பிரிவு

ஆவடி: அழகு நிலைய உரிமையாளரிடம் ரூ. 20 ஆயிரம் லஞ் சம் வாங்கியது தொடர்பாக திருமுல்லைவாயல் காவல் நிலைய இரு பெண் காவல் உதவி ஆய்வாளர்களை நேற்று லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே உள்ள திருமுல் லைவாயல், சி.டி.எச். சாலையில் ஜெனிபர் என்பவர் உரிமம் பெற்று அழகு நிலையம் மற்றும் ஸ்பா நடத்தி வருகிறார். இந்நிலையில், ஜெனிபர் அழகு நிலையம் மற்றும் ஸ்பாவுக்கான உரிமத்தை புதுப்பிக்க தவறியதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக கடந்த மாதம் 20-ம் தேதி திருமுல்லை வாயல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாக்கியலட்சுமி உள்ளிட்ட போலீஸார் விசாரித்தனர். அப்போது, அவர்கள் அழகு நிலையம் மற்றும் ஸ்பாவை மூட செய்து, ஜெனிபரை காவல் நிலையத்துக்கு வரவழைத்து விசாரித்துள்ளனர்.

மறுநாளும் விசாரணைக்காக காவல் நிலையம் சென்ற ஜெனிபரிடம், மாதம் தோறும் ரூ.50 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என, பாக்கியலட்சுமி, சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் அமுல் கூறியுள்ளனர்.

அதற்கு உடன்படாமல் இருந்த ஜெனிபர், கடந்த மாதம் 30-ம் தேதி மீண்டும் காவல் நிலையம் சென்றபோது, மாதம்தோறும் ரூ.20 ஆயிரம் தருவதாக தெரிவித்துள்ளார்.

ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத ஜெனிபர், இருவர் மீதும் திருவள்ளூர் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரிடம் புகார் அளித்தார்.

போலீஸாரின் ஆலோசனையின்படி, நேற்று திருமுல்லைவாயல் காவல் நிலையத்துக்கு ரசாயன பவுடர் தடவப்பட்ட ரூ.20 ஆயிரத்துடன் ஜெனிபர் சென்றார்.

அங்கு அவர், அமுலிடம் பணத்தை அளித்தபோது, மறைந்திருந்த டிஎஸ்பி ஜெயக்குமார் தலைமையிலான போலீஸார், இருவரையும் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT