

திருவள்ளூர்: பெரியபாளையம் அருகே உள்ள கடல் உணவு பதப்படுத்தும் தனியார் நிறுவனத்தில் ஏற்பட்ட அமோனியா வாயுக் கசிவு விபத்தில் ஏற்கெனவே 16 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் ஒரு பெண் தொழிலாளர் நேற்று உயிரிழந்தார். இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் கிராமத்தில் செயல்பட்டு வரும் இறால் உள்ளிட்ட கடல் உணவுப் பொருட்களை பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தனியார் நிறுவனத்தில் கடந்த மாதம் 21-ம் தேதி அமோனியா வாயுக் கசிவு ஏற்பட்டது. இதில், ஓய்வு மற்றும் பணியில் இருந்த 83 பேர் மயக்கம் அடைந்தனர். பலருக்கு கண் எரிச்சல், மூச்சுத் திணறல் பாதிப்புகள் ஏற்பட்டன.
பாதிக்கப்பட்டவர்கள் , மஞ்சங்காரணை வேல்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சிறுணியம் வெங்கடேஸ்வரா மருத்துவமனை, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 13 பெண்கள், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 2 பெண்கள், ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண் என, 16 பெண் தொழிலாளர்கள் ஏற்கெனவே உயிரிழந்தனர்.
இந்நிலையில், சென்னை, ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த அஞ்சலி ஜுவாங்கா (25) என்ற பெண் நேற்று உயிரிழந்தார். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.
உயிரிழந்தவர்களில் 16 பேரின் உடல்கள் அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன; 4 மருத்துவமனைகளில் 48 பேர் சிகிச்சை பெற்று, தங்குமிடத்துக்கு திரும்பினர். மற்ற 18 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையே விபத்து ஏற்பட்ட நிறுவனத்தில் இருந்து மீட்கப்பட்ட தொழிலாளர்கள், சிகிச்சை பெற்ற தொழிலாளர்கள் 182 பேர், பெரியபாளையம், கன்னிகைப்பேர் தனியார் திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர்.
அவர்களில், நேற்று முன் தினம் வரை 169 தொழிலாளர்கள், வருவாய்த் துறை அதிகாரிகளால் ஒடிசா, அசாம் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்; கன்னிகைப்பேர் திருமண மண்டபத்தில் 13 தொழிலாளர்கள் தொடர்ந்து தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
விரைவில் அவர்கள் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர் என, வருவாய்த் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.