சேலம்: பொதுமக்களிடம் ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை பெற்று அவர்களது பெயரில் வங்கியில் பசு மாடு வாங்க கடன் பெற்று பல கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாக எழுந்த புகாரின்பேரில் அறக்கட்டளை பெண் நிர்வாகி உட்பட 2 பேரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
சேலம் அம்மாப்பேட்டையைச் சேர்ந்த முஷ்ரப் பாஷா (22) என்பவர், மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
சேலம் கன்னங்குறிச்சியில் அறக்கட்டளை நடத்தி வரும் கண்ணகி, மோனிஷா உள்ளிட்டோர் அறக்கட்டளைக்கு சொந்தமான பணம் உங்களது வங்கிக் கணக்குக்கு வரும் என்றும், அதற்கு கமிஷனாக ரூ.1,000 வழங்கப்படும் என்றும் பலரிடம் கூறியுள்ளனர். இதை நம்பிய பலர் அவர்களின் ஆதார், வங்கிக் கணக்கு புத்தகம் உள்ளிட்ட ஆவணங்களை வழங்கினர். சொன்னபடி, அவர்களது வங்கிக் கணக்குக்கு ரூ.1,000 வரவு வைக்கப்பட்டுள்ளது.
ஆனால், தற்போது வங்கிகளில் இருந்து பசு மாடு வாங்க ரூ.1 லட்சம் கடன் கொடுத்ததாகவும், அந்தப் பணத்தை திரும்ப செலுத்துமாறும் கூறி வங்கியிலிருந்து நோட்டீஸ் வந்துள்ளது. எனவே, எங்களை ஏமாற்றி பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டுள்ள கண்ணகி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக விசாரணை செய்த மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீஸார், அறக்கட்டளை நடத்தி வரும் கண்ணகி, முத்துக்குமரன் ஆகிய 2 பேரை நேற்று கைது செய்தனர். தலைமறைவான மோனிஷா உட்பட பலரை போலீஸார் தேடி வருகின்றனர். இந்த மோசடியில் வங்கி அதிகாரிகளுக்குத் தொடர்பு உள்ளதா, எவ்வளவு பேரின் ஆவணங்களை பெற்று மோசடியில் ஈடுபட்டனர் என்பது குறித்து விசாரிக்கின்றனர்.