சென்னை: கிரிப்டோ கரன்சி முதலீடு என்ற பெயரில் ரூ.40 கோடி ரூபாய் வரை மோசடி செய்த புகாரில், இருவரை அமலாக்கத் துறை கைது செய்துள்ளது. சென்னை உள்பட 11 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஹாஷ்பே கிரிப்டோ கரன்சி மோசடி வழக்கு தொடர்பாக, அமலாக்கத் துறையின் சென்னை மண்டல அலுவலகம் கடந்த செப்.1-ம் தேதி சென்னை, கோவை மற்றும் கொல்கத்தா உள்ளிட்ட 11 இடங்களில் சோதனை நடத்தியது. இதில், ஹித்தேஷ் குமார், இம்ரான் பாஷா மற்றும் சையத் உஸ்மான் என்கிற பாபு ஆகியோர் தங்கள் கூட்டாளிகளுடன் இணைந்து, ஹாஷ்பே என்ற பெயரில் ஒரு மோசடியான முதலீட்டுத் திட்டத்தை உருவாக்கி ரூ.40 கோடி வரை மோசடி செய்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து, முக்கியக் குற்றவாளிகளான இம்ரான் பாஷா, ஹித்தேஷ் குமார் ஆகிய இருவரை அமலாக்கத் துறை கைது செய்தது.