கமல், விக்னேஷ்
சென்னை: ரூ.15 லட்சம் கடன் விவகாரத்தில், விடுதி உரிமையாளரை காரில் கடத்திய இருவரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை, நொளம்பூர், பிருந்தாவன் அவென்யூ பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் பிரியதர்ஷன் (39).
இவர் கடந்த 2015-ம் ஆண்டு முதல் தங்கும் விடுதி ஒன்றை நடத்தி வருகிறார். இந்த விடுதியை கட்டுவதற்காக, தனக்கு தெரிந்தவரான திருமங்கலத்தைச் சேர்ந்த செங்குட்டுவன் என்பவரிடம் ரூ.22.50 லட்சம் கடன் வாங்கி இருந்தார்.
இதில் ரூ.7.50 லட்சத்தை பிரியதர்ஷன் திருப்பிச் செலுத்திவிட்ட நிலையில், மீதி தொகையான ரூ.15 லட்சத்தை கொடுக்க வேண்டியிருந்தது.
இதனால், இருவருக்கும் இடையே பணத் தகராறு நீடித்து வந்தது. இந்நிலையில், கடந்த மே மாதம் 29-ம் தேதி பிரியதர்ஷன் தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு காரில் வந்த அடையாளம் தெரியாத 3 பேர் பிரியதர்ஷனிடம் ‘உங்களை செங்குட்டுவன் கூப்பிடுகிறார்’ என்று
கூறி வலுக்கட்டாயமாக காரில் கடத்தினர். காரினுள்ளேயே வைத்து சரமாரியாக தாக்கியதோடு அந்த கும்பல், சென்னீர்குப்பம் பகுதிக்கு காரை கொண்டு சென்று நிறுத்தியது.
அங்கு வந்த செங்குட்டுவன், பிரியதர்ஷனை மிரட்டி, “பாக்கி தொகையான ரூ.15 லட்சத்துக்கு பதிலாக நீ குடியிருக்கும் வீட்டை என் பெயருக்கு பத்திரப் பதிவு செய்து தர வேண்டும்” எனக்கூறி மிரட்டியுள்ளார்.
பின்னர், அங்குள்ள ஒரு தனியார் விடுதியில் பிரியதர்ஷனை அடைத்து வைத்துள்ளனர். அங்கிருந்து தப்பிய பிரியதர்ஷன், இதுதொடர்பாக, நொளம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில், போலீஸார் கடத்தல், தாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, கடத்தலில் ஈடுபட்ட பூந்தமல்லி, சென்னீர்குப்பத்தைச் சேர்ந்த விக்னேஷ் (34), மேட்டுத்தெருவைச் சேர்ந்த கமல் (33) ஆகிய இருவரை கைது செய்தனர்.
மேலும், ஒருவர் உள்பட கடத்தலின் பின்னணியில் இருந்த செங்குட்டுவனையும் போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.