சென்னை: கோடம்பாக்கம் விஸ்வநாதபுரம், 3-வது குறுக்குத் தெருவில் செல்வி (53) என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சரண் டெல்லியில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார்.
கடந்த 23-ம் தேதி இரவு செல்வி வீட்டில் தனியாக இருந்தபோது, அங்கு வந்த 5 பேர் செல்வியிடம், ``நாங்கள் போலீஸ், உனது மகன் போதைப் பொருள் குற்றவாளிகளின் தொடர்பில் உள்ளார். அவரை கைது செய்ய வந்துள்ளோம்'' என்றனர். பின்னர், அந்த நபர்கள் வீடு முழுவதும் சோதனையிட்டனர்.
மேலும் வீட்டிலிருந்த தங்க நகையை எடுத்துச் சென்றனர். மேலும், இந்த வழக்கிலிருந்து உனது மகனை விடுவிக்க வேண்டும் என்றால் ரூ.1 லட்சம் தர வேண்டும் என மிரட்டிவிட்டு அங்கிருந்து சென்றனர். பின்னர், செல்வியை போனில்தொடர்பு கொண்டு பணம் கேட்டுள்ளனர். பயந்துபோன செல்வி ரூ.70 ஆயிரம் கொடுத்துள்ளார்.
அதன் பின்னரும், பணம் கேட்டு மிரட்டியதால், இதுகுறித்து, அவர் கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதில், போலீஸ் எனக்கூறி மிரட்டி பணம் பறித்தது வில்லிவாக்கம் ராஜாஜி நகரைச் சேர்ந்த பிரவின் சுகுமாறன் (43), அம்பத்தூர் பாலாஜி நகரைச் சேர்ந்த சக்திவேல் (33) மற்றும் அவர்களது கூட்டாளிகள் என்பது தெரிந்தது.
மேலும், நடத்தப்பட்ட விசாரணையில், பிரவின் சுகுமாறன் ஊர்க்காவல் படையில் பணியாற்றி வருவதும், தற்போது வளசரவாக்கத்தில் போலீஸ் ரோந்து வாகன ஓட்டுநராக பணியாற்றி வருவதும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, பிரவின் சுகுமாரன், சக்திவேல் ஆகிய இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களது கூட்டாளிகளை போலீஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.