

திருவனந்தபுரம்: சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் வீடு உட்பட அவருடன் தொடர்புடைய 10 இடங்களில் அமலாக்கத்துறை நேற்று சோதனை நடத்தியது.
கடந்த மாதம் நடைபெற்ற கேரள சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றதை தொடர்ந்து, மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் பினராயி விஜயன் சமீபத்தில் ஆட்சியை இழந்தார். இதையடுத்து அவர் கேரள சட்டப் பேரவையின் எதிர்க்கட்சி தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.
பினராயி விஜயனின் மகளும் முன்னாள் தகவல் தொழில்நுட்ப ஆலோசகருமான டி.வீணா, எக்ஸாலாஜிக் என்ற கன்சல்டன்சி நிறுவனத்தை நடத்தி வந்தார். தற்போது செயல்பாட்டில் இல்லாத அந்த நிறுவனம் கடந்த 2018 மற்றும் 2019-ல் எந்தவொரு சேவையும் வழங்காமல் சிஎம்ஆர்எல் என்ற கனிம நிறுவனத்திடமிருந்து ரூ.1.72 கோடி பெற்றதாக புகார் எழுந்தது. இந்தப் பணப்பரிவர்த்தனை தொடர்பாக கடந்த 2024-ல் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் திருவனந்தபுரத்தில் பினராயி விஜயன் தற்போது வசிக்கும் வீடு, கண்ணூரில் உள்ள சொந்த வீடு, கோழிக்கோட்டில் உள்ள அவரது மருமகனும் முன்னாள் அமைச்சருமான முகம்மது ரியாஸ் வீடு உட்பட மாநிலம் முழுவதும் 10 இடங்களில் அமலாக்கத் துறை நேற்று சோதனை நடத்தியது. இந்த வழக்கில் அமலாக்கத் துறை நடவடிக்கையை ரத்து செய்யக் கோரி சிஎம்ஆர்எல் தாக்கல் செய்த மனுவை கேரள உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் தள்ளுபடி செய்த நிலையில் இந்த சோதனை நடந்தது.
பழிவாங்கும் நடவடிக்கை
திருவனந்தபுரத்தில் நேற்று சோதனை நடந்த இடத்துக்கு வந்த மார்க்சிஸ்ட் எம்.பி. ஜான் பிரிட்டாஸ் கூறுகையில், “இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. இந்த விவகாரத்தில் பாஜகவும் காங்கிரஸும் அரசியல் ரீதியாக இணைந்து செயல்படுகின்றன. கேரள தேர்தல் பிரச்சாரத்தின்போது பினராயி விஜயனுக்கு எதிராக அமலாக்கத்துறை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.
ஆனால் தற்போது அதே மத்திய முகமை அரசியல் கருவியாக பயன்படுத்தப்படுவதன் மூலம் காங்கிரஸ் பயனடைகிறது. எக்ஸாலாஜிக் நிறுவனத்துடன் பரிவர்த்தனைகளில் ஈடுபட்ட நிறுவனம், தற்போதைய 2 அமைச்சர்கள் உட்பட காங்கிரஸ் தலைவர்களுக்கு நேரடிப் பணம் வழங்கியுள்ளது. அந்தப் பணப்பரிவர்த்தனைகள் குறித்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தவில்லை” என்றார்.
அரசியல் உள்நோக்கம்
இந்த சோதனை அரசியல் உள்நோக்கம் கொண்டது என மார்க்சிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி குற்றம் சாட்டினார். அதேவேளையில் மாநில பாஜக துணைத் தலைவர் ஷான் ஜார்ஜ் கூறுகையில், “எஸ்எப்ஐஓ (கடும் முறைகேடு புலனாய்வு அலுவலகம்) மேற்கொண்ட விசாரணையில் வீணா விஜயன் மூன்றாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். அவருடன் தொடர்புடையவர்களின் வெளிநாட்டு வங்கிக் கணக்குகள் குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும்.
இந்த வழக்கு இறுதியில் பினராயி விஜயனை சென்றடையும். விஜயனும் அவரது மகளும் கைது மற்றும் சிறை தண்டனையை எதிர்கொள்ள நேரிடும். விஜயன் மட்டுமின்றி பல அரசியல் தலைவர்கள் பணம் பெற்றுள்ளனர். இதில் தொடர்புடையவர்களின் பெயர்கள் வெளியாவதை தடுக்க முயற்சிகள் நடக்கின்றன” என்றார்.
கார் கண்ணாடிகள் உடைப்பு
திருவனந்தபுரத்தில் நேற்று அதிகாலையில் சோதனை தொடங்கியதில் இருந்து பினராயி விஜயனும் அவரது குடும்பத்தினரும் வீட்டுக்குள்ளேயே இருந்தனர். அதேநேரம் நூற்றுக்கணக்கான மார்க்சிஸ்ட் தொண்டர்கள் வெளியே திரண்டு அமலாக்கத் துறைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகள் சென்ற ஒரு வாகனத்தை தொண்டர்கள் வழிமறித்து அமலாக்கத் துறைக்கு எதிராக முழக்கமிட்டனர். அப்போது கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் முகப்பு கண்ணாடி சேதம் அடைந்தது.
போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் அங்கிருந்த பாதுகாப்பு பணியாளர்கள் மீது பிளாஸ்டிக் பாட்டில்கள், ஹெல்மெட்டுகள் மற்றும் கற்களை வீசியதாக கூறப்படுகிறது. உடனே கட்சியின் மூத்த தலைவர்கள் தலையிட்டு, தொண்டர்களை அமைதிப்படுத்தி, வன்முறையை கைவிடுமாறு கேட்டுக்கொண்டனர். மேலும் திருவனந்தபுரத்தில் காலையிலிருந்து போராட்டங்களும் அதற்கு எதிராக போலீஸ் நடவடிக்கைகளும் பல மணி நேரம் நீடித்தன. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர மாநில போலீஸார் கடுமையாகப் போராடினர்.