சென்னை: தமிழக பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெயரில் போலி இ-மெயில் கணக்கு தொடங்கி, அமைச்சர் பதவி வாங்கித் தருவதாகக் கூறி ரூ.8 கோடி பேரம் பேசியதாக 2 பேரை வில்லிவாக்கம் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 செல்போன்கள், ஒரு கம்ப்யூட்டர் ‘சிபியு’ பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து நிஸ்வாக் என்பவர் வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், வெங்கடேஷ் என்பவர் அமைச்சர் பெயரில் போலியான இ-மெயில் கணக்கை உருவாக்கி, ஆள்மாறாட்டம் செய்து போலியான மின்னணு ஆவணங்களை தயாரித்து மோசடியில் ஈடுபட்டதாக கூறியிருந்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், கடந்த ஜூலை மாதம் வேலூரைச் சேர்ந்த ரூபன் ராஜ் (27), தண்டையார்பேட்டையைச் சேர்ந்த சக்தி அர்ஜுன் (21) ஆகியோர், தங்களுக்கு அமைச்சரைத் தெரியும் என்றும், ரூ.8 கோடி கொடுத்தால் வேலூர் தொகுதி எம்.எல்.ஏ.வுக்கு அமைச்சர் பதவி வாங்கித் தர முடியும் என்றும் வெங்கடேஷுக்கு தெரிந்த தயாளன் என்பவரிடம் தெரிவித்தது தெரியவந்தது.
இதனை நம்பிய தயாளன், வெங்கடேஷ் மூலம் இந்த தகவலை எம்.எல்.ஏ அலுவலகத்துக்கு தெரிவித்துள்ளார். இதற்கிடையே ரூபன் ராஜ் தனது மடிக்கணினியை பயன்படுத்தி அமைச்சர் பெயரில் போலி இ-மெயில் கணக்கை உருவாக்கியுள்ளார். அதிலிருந்து வந்ததாக கூறப்படும் உறுதிப்படுத்தல் செய்தியை செல்போனில் ‘ஸ்கிரீன்ஷாட்’ எடுத்து, வெங்கடேஷ் மூலம் வாட்ஸ்-அப்பில் அனுப்பி நம்ப வைத்ததாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இதனால் சந்தேகமடைந்த எம்.எல்.ஏ. சம்பந்தப்பட்ட நபர்களுடன் குழு வீடியோ அழைப்பில் பேசியபோது, அமைச்சர் பெயரில் ஆள்மாறாட்டம் செய்து போலி இ-மெயில் உருவாக்கி பணம் பறிக்க முயன்றது தெரியவந்தது.
இதையடுத்து வில்லிவாக்கம் காவல் ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி, வேலூர் விருப்பாட்சிபுரத்தைச் சேர்ந்த ரூபன் ராஜ், திருவொற்றியூரைச் சேர்ந்த சக்தி அர்ஜுன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 செல்போன்கள் மற்றும் ஒரு ‘சிபியு’ பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட இருவரும் செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.