கோவை: கோவை ஒண்டிப்புதூர் எம்.ஆர்.ஆர்.லேஅவுட் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (54). அதிமுக நிர்வாகியான இவர், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். கடந்த 5-ம் தேதி, சுரேஷ்குமார், ஒண்டிப்புதூர் சுங்கம் மைதானம் அருகே நின்று கொண்டிருந்தார்.
அப்போது, இவருக்கும் ஒண்டிப்புதூர் ராமச்சந்திரா வீதியைச் சேர்ந்த முருகேசன் (51), என்பவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 9-ம் தேதி இருதரப்பினரிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
அப்போது, முருகேசன் (51), அவரது நண்பர்கள் போயர் வீதியைச் சேர்ந்த தம்பிதுரை (42), அனிஷ் ஆகியோர், சுரேஷ்குமார், அவரது நண்பர்களான, அதிமுக நிர்வாகி ஈஷா செந்தில்குமார் மற்றும் சிவக்குமார், சிவராம் ஆகியோரை கத்தியால் குத்தி விட்டு தப்பிச் சென்றனர்.
அக்கம் பக்கத்தினர், அவர்களை மீட்டுஅருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். இச்சம்பவம் தொடர்பாக சுரேஷ்குமார் அளித்த புகாரின்பேரில், முருகேசன், அனிஷ், தம்பிதுரை ஆகியோர் மீது சிங்காநல்லூர் போலீஸார் வழக்குப்பதிந்தனர். பின்னர் முருகேசன், தம்பிதுரை ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள அனிஷை தேடி வருகின்றனர்.