சென்னை: மாணவி கடத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக, மன அழுத்தத்தில் பொய் புகார் அளித்துவிட்டதாக மாணவி புகாரை திரும்ப பெற்றுக் கொண்டுள்ளார்.
திருச்சியைச் சேர்ந்த 22 வயதுடைய பி.டெக். மாணவி ஒருவர் கடந்த மாதம் 14-ம் தேதி ப்ராஜெக்ட் செய்ய வேண்டி சென்னை வந்து, அடையாறு பகுதியில் உள்ள பெண்கள் விடுதியில் அறை எடுத்து தங்கினார். சென்னை வந்த சில நாட்களில் அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் மாணவி செல்போன் எண்ணை ‘ஹெக்’ செய்து அவரது புகைப்படங்களை பதிவிறக்கம் செய்ததாக கூறப்படுகிறது.
பின்னர் அந்த புகைப்படங்களை மார்பிங் செய்து ஆபாசப் படமாக மாணவியின் செல்போனுக்கு அனுப்பிய கும்பல் இந்த புகைப்படங்களை அனைவருக்கும் அனுப்பி வைத்துவிடுவோம் எனக்கூறி மிரட்டினராம்.
இந்நிலையில் கடந்த 9-ம் தேதி கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையம் சென்ற அந்த மாணவி, வாய்மொழியாக புகார் தெரிவித்தார். அதில், மார்ச் 9 அன்று காரில் வந்த அடையாளம் தெரியாத 4 பேர் கும்பல் தன்னை வலுக்கட்டாயமாக காரில் கடத்தி முகத்தில் மயக்க பவுடரை பூசி, பின்னர் அடையாறில் இறக்கி விட்டதாகவும், அதன் பின்னர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும், முன்னதாக, தன்னுடைய வாட்ஸ்-அப் எண்ணுக்கு 2 வெவ்வேறு எண்களிலிருந்து மார்ஃபிங் செய்த தன்னுடைய புகைப்படங்களை அனுப்பிய அடையாளம் தெரியாத நபர், அவற்றை, நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அனுப்பிவிடுவதாக மிரட்டியதாகவும் தெரிவித்தார்.
இதனால், அந்த மாணவி மிரட்டப்பட்டதோடு, ஓடும் காரில் பாலியல் வன்கொடுமையும் செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தினர். குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை ஆணையர் வனிதா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
மாணவி தெரிவித்த பகுதிகளுக்கு சென்ற போலீஸார் அங்கு தீவிர விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் திடீர் திருப்பமாக புகார் அளித்த மாணவி போலீஸ் அதிகாரிகளிடம் சென்று, “படிப்பு விவகாரத்தில் கடுமையான மன அழுத்தத்தில் இருந்தேன்.
இதனால் என்னை 4 பேர் கும்பல் கடத்தியதாகவும், முகத்தில் மயக்க பவுடரை பூசியதாகவும் உண்மைக்கு மாறான தகவலுடன் புகார் அளித்துவிட்டேன். என்னை மன்னித்து விடுங்கள்' என தெரிவித்துள்ளார்.
இது போன்றதொரு சம்பவமே நடைபெறவில்லை என தெரிந்த பிறகே போலீஸார் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். மேலும், மாணவிக்கு மன அழுத்தத்துக்கான உளவியல் ஆலோசனை வழங்கவும் ஏற்பாடு செய்துள்ளனர்.