கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் ராஜேஷ்

 
க்ரைம்

திருவாரூரில் தலைமை காவலரை தாக்கிய தவெக வழக்கறிஞர் அணி நிர்வாகி கைது

சி.கோபாலகிருஷ்ணன்

திருவாரூர்: திருவாரூரில் தலைமைக் காவலரை தாக்கிய தவெக வழக்கறிஞர் அணி நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.

திருவாரூரை சேர்ந்தவர் வழக்கறிஞர் ராஜேஷ். இவர் தமிழக வெற்றிக் கழகத்தில் வழக்கறிஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளராக உள்ளார். நேற்று இவர் தனது இருசக்கர வாகனத்தில் திருவாரூரில் உள்ள நீதிமன்ற வளாகத்துக்கு சென்றுள்ளார்.

அங்கு போலீஸார் வாகனங்கள் நிறுத்துமிடம் அருகே தனது மோட்டார் பைக்கை நிறுத்த சென்ற வழக்கறிஞர் ராஜேஷ், போலீஸ் வாகனத்தில் அமர்ந்திருந்த தலைமை காவலர் வினோத் என்பவரிடம், ஜிப் அருகே இறந்த நிலையில் கிடந்த நாயை அப்புறப்படுத்த கூறியுள்ளார். அதற்கு காவலர் வினோத், ‘இது எனது வேலை இல்லை’ என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அங்கிருந்தவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த நிலையில், காவலரை பின்தொடர்ந்து வந்த வழக்கறிஞர் ராஜேஷ், நீதிமன்ற வளாகத்துக்கு வெளியே வந்த வினோத்தை தாக்கியுள்ளார். இது தொடர்பாக திருவாரூர் தாலுகா காவல் நிலையத்தில், காவலர் வினோத் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கறிஞர் ராஜேஷ் (34) நேற்று இரவு கைது செய்யப்பட்டார்.

பின்னர் நீதிபதி முன்னர் ஆஜர்படுத்தப்பட்ட வழக்கறிஞர், நன்னிலம் கிளைச் சிறையில் இன்று அதிகாலை அடைக்கப்பட்டார்.

வழக்கறிஞர் மற்றும் காவலர் இடையே நடந்த இந்த தாக்குதல் சம்பவம் திருவாரூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT